உடைக்க நினைத்த மோடி அடித்து நொறுக்கிய நிதீஷ் – பீகார் பரபரப்பு

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து 2017 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது. அதைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட ஜேடியு, மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது.

ஆனால், அந்தத் தேர்தலில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிட்டதால் ஓட்டுகள் சிதறி, நிதிஷ் கட்சிக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அந்தத் தேர்தலில் அவரது கட்சி 43 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜக 74 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரசு, மார்க்சிஸ்ட்டுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்ட லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 75 இடங்களில் வென்றது.

குறைவான எண்ணிக்கையில் ஜேடியு வெற்றி பெற்றாலும், நிதிஷ் குமாருக்கு மீண்டும் முதல்வர் பதவியை பாஜக விட்டுக் கொடுத்தது. அப்போதில் இருந்தே ஜேடியு, பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. இதன் காரணமாகவே ஒன்றிய அமைச்சரவையிலும் ஜேடியுக்கு உரிய மரியாதையை பாஜக அரசு தரவில்லை. ஜேடியு தரப்பில் ஆர்சிபி சிங் ஒருவர் மட்டுமே ஒன்றிய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். முதலில் நிதிஷ் குமாரின் விசுவாசியாக இருந்த ஆர்சிபி சிங் பின்னர் ஒன்றிய அரசுக்கு நெருக்கமானார். இதனால், நிதிஷ்-ஆர்சிபி சிங் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதன் காரணமாக, ஆர்சிபி சிங்குக்கு முடிவு கட்டும் வகையில், மாநிலங்களவை உறுப்பினராக நீடிக்க முடியாத படி, அவருக்கு நிதிஷ் குமார் வாய்ப்பு தராமல் மறுத்தார். நிதிஷின் இந்த அதிரடி நடவடிக்கையால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த ஆர்சிபி சிங் அமைச்சர் பதவியையும் துறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதோடு, சொத்துக் குவிப்பு தொடர்பாக அவர் மீது ஜேடியு கட்சி விசாரணை நடத்தியது. இந்த அதிருப்தியில் கட்சியிலிருந்து ஆர்சிபி சிங் விலகினார்.

இதற்கிடையே, பாஜக உடனான நிதிஷின் உறவு ஒவ்வொரு காலகட்டத்திலும் மோசமடைந்தது. அக்னிபாதை திட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட விசயங்களில் ஒன்றிய அரசுடன் நிதிஷ் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார்.

மேலும், சமீபத்தில் ஒன்றிய அரசு அழைத்த எந்த நிகழ்ச்சியிலும் நிதிஷ் கலந்து கொள்ளவில்லை.குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழா, புதிய குடியரசுத்தலைவர் முர்மு பதவியேற்பு, பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் என அனைத்தையும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தார்.

எனவே, மகாராஷ்டிரா பாணியில் ஆர்சிபி சிங் மூலமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைத்து, ஆட்சியைப் பிடிக்க பாஜக சதித்திட்டம் தீட்டுவதாக நிதிஷ் குமாருக்குத் தெரிய வந்தது.

இதன் காரணமாக, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றும் பொருட்டு, பாஜக உடனான உறவை முறிக்க முடிவு செய்த அவர், கட்சியின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார்.

பாட்னாவில் நிதிஷ் குமார் வீட்டில் நேற்று அந்தக் கூட்டம் நடந்தது. அதில், பாஜக முதுகில் குத்திவிட்டதாக நிதிஷ் குமார் ஆவேசமாகப் பேசினார். அதே சமயம், பாஜக கூட்டணியிலிருந்து விலகினால், ஆதரவு அளிக்கத் தயார் என ஆர்ஜேடி, காங்கிரசு, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் நிதிஷுக்கு ஆதரவு தெரிவித்தன. அக்கட்சிகளும் அவசர ஆலோசனை நடத்தின.

இதனால், பீகார் அரசியலில் நொடிக்கு நொடி விறுவிறுப்பு ஏற்பட்டது. பாஜக உடனான கூட்டணியை முறிக்க கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சம்மதித்ததைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்குச் சென்ற நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாகக் கடிதம் கொடுத்தார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர்,

இது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எடுத்த முடிவு என்றார்.

அதைத் தொடர்ந்து, ஆர்ஜேடி கட்சி தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ்வுடன் ஆலோசனை நடத்திய நிதிஷ் குமார், மாலையில் மீண்டும் ஆளுநர் பாகு சவுகானைச் சந்தித்து, மெகா கூட்டணியுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார்.

ஆர்ஜேடி, காங்கிரசு, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 6 கட்சிகளின் 164 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக ஆதரவு கடிதத்தையும் அவர் வழங்கினார்.

அதன் அடிப்படையில் நிதிஷ்குமாரை புதிய ஆட்சி அமைக்கஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இன்று மதியம் 2 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பீகார் முதல்வராக 8 வது முறை நிதிஷ் பதவியேற்கிறார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்க உள்ளார்.

ஒரே நாளில் பாஜக உடனான 5 ஆண்டு உறிவை முறித்து விட்டு, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நிதிஷ் புதிய ஆட்சி அமைத்திருப்பது தேசிய அளவில் பரபரப்பாகி உள்ளது. மேலும், பாஜக கூட்டணியை முறித்த நிதிஷின் முடிவை பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

பீகார் சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம்…..

மொத்த உறுப்பினர்கள் – 243
தற்போதுள்ள உறுப்பினர்கள்
(1 ஆர்ஜேடி எம்எல்ஏ தகுதி நீக்கம்) – 242

ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்கள் – 122

மெகா கூட்டணியின் பலம்
ஜேடியு (1 சுயேச்சை உட்பட) 46
ஆர்ஜேடி 79
காங்கிரஸ் 19
சிபிஐ (எம்எல்) 12
சிபிஐ 2
மார்க்சிஸ்ட் 2
எச்ஏஎம் 4
மொத்தம் 164
பாஜ 77
ஏஐஎம்ஐஎம் 1

பீகாரில் நடந்துள்ள இந்த அதிரடித் திருப்பம் எல்லா மாநிலங்களிலும் செல்வாக்குடன் உள்ள மாநிலக்கட்சிகளை உடைத்து குறுக்கு வழியில் ஆட்சியதிகாரத்தைப் பிடித்துவரும் பாஜகவுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.

அதேசமயம் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தால் பாஜகவின் எதேச்சதிகாரத்தை வீழ்த்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Response