1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு – அரசு மற்றும் தனியார்பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு

தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் என மொத்தம் 32 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இது தவிர, சுமார் 12 ஆயிரம் தனியார் சுயநிதிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 1 கோடியே 20 இலட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகிறார்கள்.

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுக் காலம் பள்ளிகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு, மே மாதம் தான் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

கீழ் வகுப்புகளைப் பொறுத்தவரையில் ஏப்ரல், மே மாதத்தில் தேர்வுகள் நடந்தாலும் மே மாதம் இறுதியில் விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஜூன் 13 ஆம் தேதி (இன்று) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

அதன்பேரில்,இன்று தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, பள்ளிகளின் வளாகங்கள் அனைத்தும் தூய்மைப் பணி செய்யப்பட்டும், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

அதன்படி கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கிடையே, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புக்கு இணங்க, அனைத்து மாவட்டங்களிலும், பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பேரணி நடத்துவது, துண்டுப் பிரசுரங்கள் வினியோகம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் பள்ளிகள் கட்டண பிரச்னை காரணமாக அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், சில நாட்களாக பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க பெற்றோர் ஆர்வமுடன் வருகின்றனர். உடனடியாக அந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டும் வருகின்றனர்.

கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு குறைந்த கால அளவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால், முழு பாடங்களையும் மாணவர்கள் படிக்க முடியாது என்பதால், பாடத்திட்டம் குறைக்கப்பட்டது.

அதனால் இந்தக் கல்வியாண்டில் முழுமையாகப் பாடங்களைப் படிக்க வசதியாக முன்கூட்டியே பள்ளிகள் திறக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு, தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பாடத்திட்டம் முழுமையாக இடம் பெற உள்ளது. ஆசிரியர்களுக்கும் பாடத்திட்டத்தைப் போதிக்க போதிய கால அவகாசம் கிடைக்கும். மேலும், அதிக அளவில் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நாடி வருவதால், அரசுப் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் வேலையின்றி இருக்கின்ற பட்டதாரிகளுக்கும் வேலை கிடைக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தான் இன்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 20 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடக்க உள்ளன.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

இன்று பள்ளிகள் திறந்த உடன், தொடக்கப்பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு, நடுநிலைப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, மேல்நிலைப்பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்குத் தாமதமின்றி டிசி வழங்கிட வேண்டும்.

இதர வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் தாமாக முன்வந்து டிசி கோரினால், அவற்றைத் தடையின்றி வழங்கிட வேண்டும் என்றும் அனைத்து அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் டிசி வழங்கும் பணிகளை இன்றும், நாளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப்பள்ளிகளில் இன்றே மாணவர் சேர்க்கையும் தொடங்க உள்ளதால், 8 ஆம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் டிசி இல்லாவிட்டாலும் அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த மாணவர்கள் முந்தைய பள்ளிகளிடம் டிசி பெற்று அதைச் சமர்ப்பித்த பின் முறையாகப் பதிவேட்டில் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தவிர, ஆர்டிஈ சட்டத்தின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் கீழ் சேர முன்வரும் குழந்தைகளையும் தடையின்றிச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Response