நாங்கள் 10 ரூபாய் கொடுத்தால் நீங்கள் 10 பைசா கொடுக்கிறீர்கள் – நேருக்கு நேராக மோடியை வெளுத்த ஸ்டாலினுக்குக் குவியும் பாராட்டுகள்

ஒன்றிய மற்றும் தமிழக அரசுகளின் பல்வேறு திட்டப் பணிகள் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார். ஐதராபாத்தில் இருந்து தனிவிமானத்தில் சென்னை வந்த பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐ.என்.எஸ். அடையாறுக்கு வந்தார். அங்கு அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு தமிழின் புகழ்பெற்ற காப்பியமான சிலப்பதிகாரம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலைப் பரிசாக அளித்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சி இரவு 7.30 மணியளவில் முடிந்தது. அதைத் தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு அவருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் அங்கிருந்து இந்திய விமானப் படை விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடியின் முன்னிலையில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறிப்பேசி மோடி அரசின் மீது பல விமர்சனங்களை நேருக்கு நேராக முன்வைத்தார்.
அவருடைய பேச்சுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அதுபற்றிய ஓர் பார்வை….

இரண்டு தலைவர்கள் அல்ல; இரண்டு தத்துவங்கள் நேருக்கு நேராக தங்கள் முரசை ஒங்கி ஒலித்திருக்கின்றன.

திராவிட மாடலும், குஜராத் மாடலும் முட்டி ‘நேரு அரங்கில்’ மோதிக்கொண்டன.

முதலமைச்சர் என்ற வகையில் உரைப்போட்டியின் முதல் இன்னிங்ஸ் வாய்ப்பு டாஸ் போடாமலேயே ஸ்டாலினிடம் வந்து விழுந்தது.எந்த பந்தையும் விட்டுவிடக்கூடாது என சொற்களை விளாசிய ஸ்டாலின், மிகக்குறைந்த பந்தில் செஞ்சுரி அடித்திருக்கிறார்.

மத்திய அரசு என்ற பதத்தைத் தவிர்த்துவிட்டு, ஒன்றியம் எனும் சொல்லை முதன்மைப்படுத்தி உரையை தொடங்கையிலேயே ஸ்டாலினின் உரை எத்தகைய திசையில் செல்லப்போகிறது என தெரிந்துகொண்டு அரங்கம் அதிர்ந்தது.

GDP-ல் 9.22%, ஒட்டுமொத்த இந்திய ஒன்றிய நிதி வருவாயில் 6%, ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 8.4%, ஜவுளித்துறையில் 19.4%, தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33%, வாகன ஏற்றுமதியில் 32.5%,
ஒட்டுமொத்த இந்திய பங்களிப்பில் ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாடு கொடுத்துக்கொண்டிருக்கும் பங்களிப்பின் திறத்தை வரிசைபடுத்திய ஸ்டாலின், இந்திய ஒன்றியத்தின் மூலம் தமிழ்நாடு பெறும் நிதிப்பங்களிப்பு வெறும் 1.2% ஆக மட்டுமே இருக்கிறது என முத்தாய்ப்பு வைத்தது, ‘சௌகிதார் vs சௌகிதார் சோர் ஹாய்’ நினைவுகளை மோடிக்கு அளித்திருக்கலாம்.

ஒன்றிய அளவில் முன்னோடியாக இருக்கும் இந்த வளர்ச்சிதான், எங்களின் திராவிட மாடல் வளர்ச்சி என ஸ்டாலின் சொன்னது எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் ஸ்ட்ரோக். சச்சினைப்போல மிக லாவகாம அந்த ‘Stright Drive’ ஐ ஆடினார் ஸ்டாலின்.

திராவிட மாடல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பை நீக்குவதே – இந்த இடைவெளியை நிரப்புவதே உண்மையான கூட்டாட்சி என வர்ணித்த ஸ்டாலின், ‘கூட்டுறவு கூட்டாட்சி’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

‘கூட்டுறவு கூட்டாட்சி’ என்ற சொல், பாஜக பயன்படுத்தும் சொல்; 2014 முதல் மோடி கண்டுவைத்த சொல்.
ஸ்டாலின் அந்தச் சொற்களை பயன்படுத்தியது நிச்சயம் மோடியை எரிச்சலூட்டியிருக்கும்; பவுலரின் கால்களுக்கு இடையே ஊடாடிச் செல்லும் Straight drive-ன் கிழிசலைப் போல.

இன்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் சுமார் 31,500 கோடி மதிப்பிலான மொத்தத் திட்டத்தில் சுமார் 25,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் சாலை – போக்குவரத்துத் திட்டங்கள் தான்.
இவற்றில் மாநில அரசின் பங்களிப்பும் இருக்கும்.

எனவே, இந்தத்திட்டங்களை மோடி முழுவதுமாக ‘Own’ செய்யக்கூடாது என்பதற்காக,
தமிழ்நாட்டில் சுமார் 44,000 கோடி மதிப்பில் ஒன்றிய அரசு சார்பில் சாலை – போக்குவரத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில அரசு சாலை போக்குவரத்துத் துறைக்கு என 18,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது’ என குறிப்பிட்ட ஸ்டாலின்,

வீடு வழங்கும் திட்டங்களில், திட்டங்களைத் தொடங்கும்போது அதிக நிதியளிக்கும் ஒன்றிய அரசு, திட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது ஒன்றிய அரசு தன் நிதிப் பங்களிப்பைக் குறைத்துவிடுகிறது; இதனால் பயனாளிகள் தரப்பில் அளிக்க வேண்டிய தொகை நிலுவையாகிறது; வேறு வழியில்லாமல் அதை மீண்டும் மாநில அரசே கட்ட வேண்டியிருக்கிறது என போட்டு உடைத்தார்.

நெடுஞ்சாலைத்துறையில் மாநில அரசின் நிதி ஒதுக்கீடு – வீடு வழங்கும் திட்டங்களில் ஒன்றிய அரசின் கைகழுவல்கள் இரண்டையும் சேர்த்து விளாசிய
ஸ்டாலினின் இந்த ஸ்விங் ஷாட், ‘ஜம்பமாக வந்து திட்டங்களைத் தொடங்கி வைத்தால் மட்டும் போதாது; கடைசிவரை ஒழுங்காகக் காசு கொடுக்க வேண்டும்’ என குத்திக்காட்டுவது போல இருந்தது.

இறுதியாக, இலங்கைச் சூழலைப் பயன்படுத்தி மீனவர் நலன் காக்க கட்சத்தீவு மீட்பு, ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஜூன் 2022க்குப் பிறகும் நீட்டித்தல், நீட் விலக்கிற்கு ஒப்புதல் என கடைசி ஓவர் சிக்ஸர்களை விளாசி முடித்த பிறகு, ‘உறவுக்குக் கைகொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என ஸ்டாலின் முடித்துக்கொண்டது, ‘Dhoni Finishes of him style’ வகையறா அடி.

ஸ்டாலினின் விளாசலில் ஸ்கோர் போர்டு எகிறிய பிறகு, மிகக்கடினமான சேஸிங் தனக்கு இருக்கிறது எனத் தெரிந்தே களத்துக்கு வந்தார் மோடி.

மோடிக்கு யாரும் ஆடக்கற்றுத்தரத்தேவையில்லை. எதிரணி பவுலரிடம் கைகுலுக்கிக் கொண்டே, நடுநிலை அம்பயரையும் விலைக்கு வாங்கிவிட்டு, 3rd அம்பயராக அதானிகளை நியமிக்கும் ஆட்டக்காரர் அவர்.
ஆனால், மே மாத தட்பவெட்பத்தில் , சென்னையின் திராவிட மைதானத்தில் இந்த சேசிங் கடினம் என்று மோடிக்குத் தெரியும்.

சளைக்காமல் ஆடிய மோடி, தன் சகல வித்தையையும் பயன்படுத்தினார் என்றே வர்ணிக்க வேண்டும்.
‘இளைஞர்களால் இளைஞர்களுக்காக இளைஞர்களே நடத்திக்கொள்ளும் ஆட்சி, உட்கட்டமைப்பின் இலக்கணத்தையே மாற்றி அமைத்த ஆட்சி, கிராமங்கள் வரை அதிநவீன இணைய வசதி, வீடுதோறும் குடிநீர், 100 லட்சம் கோடியில் கதி சக்தி உட்பட குழாய் திட்டம், 7.5 லட்சம் கோடியில் மூலதன செலவின ஒதுக்கீடு என 360 டிகிரியில் சுழன்றடித்தார் மோடி.

நைச்சியமான உடல்மொழி, வியுக்தியான சொற்கள், குழைவும் கம்பீரமும் கலந்த பாவனைகள் என தனக்கேயுரிய தகிடாட்டங்களால் பார்வையாளர்களை மயக்க முழுத்திட்டமிடலுடன் வந்திருந்தார் மோடி.

ஆனால், முன்னெச்சரிக்கையாக பீல் செட்டிங் செய்துவைத்திருந்த ஸ்டாலின் உரை மோடியின் cover driveகளை கவ்வி நிறுத்திவிட்டது.

மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் கம்பீரத்தோற்றம் தரும் மொழிபெயர்ப்பாளரை அமர்த்திக் கொண்டு மோடி ஆடிய நாக்கு நடனம், முன் கூட்டியே ஸ்டாலின் வீசிவிட்டுச் சென்ற முட்களால் குத்தப்பட்டு நிலை தடுமாறிவிட்டது.
நாங்கள் 10 ரூபாய் கொடுத்தால், நீங்கள் 10 பைசா கொடுக்கின்றீர்கள் என ஸ்டாலின் சவுக்கடித்த பிறகு, செம்மொழி ஆய்வு நிறுவனம் மொத்தமும் எங்க காசு என மோடி சொல்வது நகைச்சுவையாக இருந்தது.
உயர்நீதி மன்றத்திலும், ஒன்றிய பீடத்திலும் ஆளும் மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என 110 மீட்டர் சிக்ஸரை ஸ்டாலின் விளாசிய பிறகு, புதிய கல்விக்கொள்கையில் தமிழை வளர்க்கப்போகிறோம் என்ற மோடியின் ‘wide ball’ சிக்ஸர்கள் எடுபடவில்லை.

நீட் விலக்குக்குக் கோரிக்கை வைக்கும் ஸ்டாலினிடம், மாநில மொழிகளில் இனி மெடிக்கல் கற்கலாம் என மோடி சொல்வது க்ளீன் போல்டுக்கு Review கேட்கும் முயற்சி. 3rd அம்பயர்களால் கூட காப்பாற்ற முடியாத அபாய கட்டம் அது.

கடைசியாக, உரையை முடித்த பிறகு, பாரத் மாதா கீ ஜெய் என பதற்றத்துடன் மோடி கத்தியதும், வந்தே மாதரம் வார்த்தைகளால் ஒத்தியதும், நான் தோத்தாலும் உன் ரன் ரேட் ஏறிடக்கூடாது என்கிற கடைசி நேர கவலை.
அதற்கு வேண்டுமானால், ‘குழாய் அடியில உருண்டு என்ன புண்ணியம்; கோவில்ல வாசல்லல உருளனும்’ என்ற மகத்தான வரிகளை வடிவேலிக்கலாம்.

மோடி டேன்சிங் ரோஸ்தான். எதிரணியினரே அவருக்குக் கைதட்டுவார்கள்.
சந்தேகம் இல்லை.
ஆனால், அவர் மோதியது கபிலனிடம்.
கபிலன், கருணாநிதி எனும் ரங்க வாத்தியார் சிஷ்யன் என டேன்சிங் ரோசுக்கு காட்டிவிட்டார்.(இதில் வரும் கபிலன்,ரங்கவாத்தியார், டான்சிங்ரோஸ் ஆகிய பெயர்கள் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் இடம்பெறும் பாத்திரங்களின் பெயர்கள்)

– விவேக் கணநாதன்

Leave a Response