கேரள அரசு சதி செய்கிறது. ஜெ என்ன செய்யப்போகிறார்? – பெ.மணியரசன் காட்டம்

முல்லைப் பெரியாற்றில் புதிய அணைகட்டித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தருவோம் என்று உம்மன் சாண்டி கூறுவது
நாக்கில் இனிப்பைத் தடவிவிட்டு நஞ்சு கொடுப்பது போன்றது என்று  தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்  பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்விவரம்…

கேரள முதலமைச்சர் திரு. உம்மன் சாண்டி, மற்ற அமைச்சர்களையும் அழைத்துக் கொண்டு தில்லி சென்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து, இப்பொழுதுள்ள முல்லை பெரியாறு அணையை மூடிவிட்டுப் புதிய அணை கட்ட அனுமதி வேண்டும் என்றும் அதற்கான பேச்சு நடத்த தமிழ்நாடு அரசைத் தலைமை அமைச்சர் இணங்க வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். புதிய அணை கட்டியதும் தமிழ்நாட்டிற்குத் தேவையான தண்ணீரைக் கேரளம் திறந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

அண்மையில் தமிழ்நாட்டில் பெய்த பெருமழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளும் தங்கள் கண்களைத் திறந்துவிட்டதாகவும் உம்மன் சாண்டி கூறியுள்ளார். 999 ஆண்டுகளுக்கு எப்படி இப்போதுள்ள அணை நிலைத்து நிற்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்போதுள்ள அணையின் பாதுகாப்பு குறித்து சோதித்துப் பார்க்க அனைத்திந்திய மற்றும் பன்னாட்டு நீரியல் வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று உம்மன் சாண்டியுடன் சென்ற கேரள நீர்ப்பாசன அமைச்சர் பி.ஜே. ஜோசப் கூறியுள்ளார்.

நாக்கில் இனிப்பைத் தடவி விட்டு நஞ்சைக் கொடுப்பது போல், புதிய அணைகட்டி, தமிழ்நாட்டிற்குத் தேவையான தண்ணீர் திறப்போம் என்கிறார் உம்மன் சாண்டி. இதன் பொருள் புதிய அணை கேரள அரசின் நிர்வாகத்தின் கீழ் வந்துவிடும், அது பார்த்து, அவ்வப் போது தண்ணீர் திறந்துவிடும் என்பதாகும்.

அதாவது 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு அதன்படி தமிழ்நாட்டின் நிர்வாகத்தின் கீழ் உள்ள முல்லைப் பெரியாறு அணையும், எட்டாயிரம் ஏக்கர் நீர்ப் பிடிப்புப் பகுதியும் கேரளத்தின் நிர்வாகத்தின்கீழ் போய்விடும். 999 ஆண்டு ஒப்பந்தமும் நீங்கிவிடும்!

அவ்வாறு முல்லைப் பெரியாறு அணை கேரள அரசின் அதிகாரத்தின்கீழ் போய்விட்டால், கர்நாடகம் காவிரி நீரைத் தடுத்து வைத்துக் கொள்வது போல் கேரளமும் தடுத்து வைத்துக் கொள்ள வாய்ப்பாகும். அதைத்தான் உம்மன்சாண்டி புதிய அணைகட்டி, தமிழ்நாட்டின் தேவைக்கேற்ப தண்ணீர் தருவோம் என்கிறார்.

கேரளத்தின் இந்தத் தந்திரத்தைத் தமிழ்நாடு அரசு புரிந்து கொண்டதா? இல்லையா? உம்மன் சாண்டி தமது சதித் திட்டத்தை – பரந்த மனத்துடன் வெளிப்படுத்துவதுபோல் பாவனை காட்டி – தலைமை அமைச்சரிடம் கூறி, தமிழ்நாடு அரசைப் பேச்சு நடத்த வரச் செய்யுமாறு கேட்டதற்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும்.

உச்ச நீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழு மாதம் மூன்று முறையும், தேவைப்பட்டால் அதைவிட அதிகமாகவும் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, வலிமை ஆகியவற்றைச் சோதித்து அவ்வப்போது, சான்றளிக்கிறது. அக்குழு அனுமதித்த அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.

மறுபடி அணையின் பாதுகாப்பை சோதிக்க அனைத்திந்திய மற்றும் பன்னாட்டு வல்லுநர் குழு நிறுவ வேண்டும் என்பது முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீது தேக்காமல் முடக்கிப் போடும் தந்திரமாகும்.

அண்மையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளம்தான் தங்கள் கண்களைத் திறந்தது என்று உம்மன்சாண்டி கூறுவது நாடகத்தின் ஓர் அங்கம். கேரளத்தின் இருபது ஆண்டுகளுக்கு மேலாகவே முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டுப் புதிய அணை கட்ட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணை உறுதியானது என்பதையும் 142 அடி தண்ணீர் தேக்கத் தகுதி உள்ளது என்பதையும் மீண்டும் அனைத்திந்திய மற்றும் பன்னாட்டு வல்லுநர் குழு முல்லைப் பெரியாறு அணையை சோதிக்க வேண்டியதில்லை என்பதையும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

Leave a Response