கட்டாயத் தடுப்பூசித் திட்டத்தை தொடரக்கூடாது – கி.வெங்கட்ராமன் வலியுறுத்தல்

தடுப்பூசியைக் கட்டாயமாக்கக் கூடாது!
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும் என
மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…….

கோவிட்-19 பெருந்தொற்றைக் காரணம் காட்டி, அதற்காக அனைவருக்கும் தடுப்பூசி, கட்டாயத் தடுப்பூசி என்ற திட்டத்தை தொடரக் கூடாது என்றும், ஏற்கெனவே கட்டாயத் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக இழப்பீடு மற்றும் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அனைவருக்கும் கட்டாயத் தடுப்பூசி அளிக்கப்பட்டதால் ஏற்பட்ட மிகக் கொடிய தீய விளைவுகள் குறித்து, பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் மருத்துவ ஆய்வு இதழ்களில் சான்றுகளோடு கட்டுரைகள் எழுதி, கட்டாயத் தடுப்பூசியை எதிர்த்து வருகிறார்கள்.

பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கட்டாயத் தடுப்பூசித் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மருத்துவ ஆய்வுக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) உள்பட பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் கட்டாயத் தடுப்பூசியின் வரம்புக்குட்பட்ட பயன்களையும், எதிர்விளைவுகளையும் அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று (02.05.2022) இச்சிக்கல் குறித்த வழக்கில் தீர்ப்பளித்திருக்கிற உச்ச நீதிமன்றம், கோவிட்-19 தடுப்பூசியைக் கட்டாயப்படுத்துவது அரசமைப்புச் சட்ட உறுப்பு 21க்கு முரணானது என்று கூறியிருக்கிறது. இந்திய அரசோ, மாநில அரசுகளோ விரும்பாதவர்கள் மீது தடுப்பூசியைக் கட்டாயமாக்கக் கூடாது என்றும், தடுப்பூசிப் போட்டுக் கொண்ட சான்றிதழ்களை கட்டாயம் என்று வலுயுறுத்தக்கூடாது என்றும் ஆணையிட்டிருக்கிறது.

எனவே, தமிழ்நாடு அரசு 15 வயதுக்குக் கீழுள்ள பள்ளிக் குழந்தைகளிடம் கட்டாய கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடரக் கூடாது என மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கெனவே, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அரசாங்கமே பிரீமியம் செலுத்தி, காப்பீடு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response