கோர விபத்தில் இளம்வீரர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி

83 ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் மேகாலயாவில் இன்று தொடங்குகிறது.

இதில், தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான தீனதயாளன் விஷ்வா உள்பட 4 வீரர்கள் பங்கேற்பதாக இருந்தது. இதற்காக அவர்கள், நேற்று மகிழுந்து மூலம் அசாமில் இருந்து மேகாலயாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து மேகாலயாவின் ஷிலாங்க் நோக்கி மகிழுந்து சென்றுகொண்டிருந்தது. மேகாலயாவின் ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் எதிரே வந்த சுமையுந்து (லாரி) வீரர்கள் பயணித்த மகிழுந்து மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் இளம் வீரர் தீனதயாளன் விஷ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மகிழுந்து ஓட்டுநர் மற்றும் எஞ்சிய 3 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன் விஷ்வாவின் உடல் இன்று விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டுவரப்பட உள்ளது.

தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்கச் சென்றபோது விபத்தில் தமிழக வீரர் தீனதயாளன் விஷ்வா உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

Leave a Response