இந்திய ஒன்றியத்தில் இந்தி பேசுவோர் 27 விழுக்காடு மட்டுமே – அமித்சாவுக்கு பழ.நெடுமாறன் பாடம்

தமிழர் தேசிய முன்னிணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்….

“இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றும் நேரம் வந்துவிட்டது. மாநிலங்களுக்கிடையே தொடர்பு மொழியாகவும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அமித்சா கூறியுள்ளார்.

ஒருமைப்பாட்டின் அங்கமாக இந்தி விளங்குவதற்குப் பதில் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் ஆயுதமாக இந்தி விளங்கும் என்ற உண்மையை அவர் இன்னும் உணராததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்தி, பெரும்பான்மையினர் பேசும் மொழி என்னும் கூற்று முற்றிலும் தவறானதாகும். இந்தியாவில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 27% மட்டுமே. பீகாரி, மைதிலி, போஜ்புரி, அரியான்வி, இராஜஸ்தானி போன்ற வட்டார மொழிகளையும் இந்தி பேசுவோர் கணக்கில் சேர்த்துக்கொண்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கையைக் கழித்தால், இந்தி பேசுவோரின் எண்ணிக்கை மேலும் குறையும்.

சுமார் 300ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமே தோன்றிய மொழியான இந்தியைவிட, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இலக்கிய வளம்மிக்க செம்மொழியான தமிழ் போன்ற பல மொழிகள் இந்நாட்டில் பேசப்படுகின்றன.

மேலே கண்ட உண்மைகளை எண்ணிப்பாராமல் இந்தியைத் திணிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்குப் பெரும் கேட்டினை விளைவிக்கும் என்பதை ஒன்றிய அரசு உணரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response