சொத்துவரி உயர்வு திமுக அரசின் கையாலாகாத்தனம் – சீமான் கண்டனம்

ஒன்றிய அரசைக் காரணமாகக்காட்டி, சொத்து வரியை 150 விழுக்காடு வரை உயர்த்தி, மக்கள் தலை மீது சுமையை ஏற்றுவதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்….

தமிழ்நாட்டின் பெருநகரங்கள் முதல் பேரூராட்சிகள் வரையுள்ள குடியிருப்பு, வணிக, கல்வி பயன்பாடு கட்டடங்களின் சொத்து வரியை 150 விழுக்காடு வரை உயர்த்தியுள்ள தமிழ்நாடு அரசின் செயல்` அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் மோசமான ஆட்சி முறையால், எரிபொருள், எரிகாற்று உருளை விலையுயர்வு மற்றும் சுங்கக்கட்டண உயர்வு என யாவும் மக்கள் வாட்டி வதைத்து, அத்தியாவசியப்பொருட்கள் விண்ணைமுட்டுமளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கையில், சொத்து வரியை உயர்த்தியுள்ள திமுக அரசின் நிர்வாக முடிவு கடும் கண்டனத்துக்குரியது.

முந்தைய அதிமுக அரசு 100 விழுக்காடு வரை சொத்து வரியை உயர்த்தியபோது அதனைக் கண்டித்து போராடிவிட்டு, தற்போது 150 விழுக்காடு வரையில் சொத்துவரியை அதிகரிக்கச்செய்திருக்கும் திமுக அரசின் நிலைப்பாடு எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. தற்போதைய சொத்துவரி உயர்வானது, வீட்டு வாடகையில் எதிரொலித்து, சென்னை போன்ற பெருநகரங்களில் குடியிருக்கும் எளிய, நடுத்தர மக்களின் வாழ்நிலையில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் எதிர்கொள்ளப்போகும் பொருளாதார நெருக்கடியைப் பற்றிக் கவலைகொள்ளாது, போகிறபோக்கில் ஒன்றிய அரசின் நிதி ஆணையப் பரிந்துரையைக் காரணமாகக் காட்டிவிட்டு, தப்பிக்க நினைப்பது திமுக அரசின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது.

மக்களுக்கான அடிப்படைத்தேவைகள், அரசுப்பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் உள்கட்டமைப்புப்பராமரிப்பு போன்றவற்றுக்குத் தேவைப்படும் செலவினங்களுக்கு ஒரு அரசு, மதுக்கடைகளையும், மக்கள் செலுத்தும் வரியையுமே முழுமையாக நம்பி நிற்பது வெட்கக்கேடானது. இது அரை நூற்றாண்டுகால திராவிட அரசுகளின் நிர்வாகத்திறமையின்மையையே வெளிக்காட்டுகிறது. முந்தைய அதிமுக அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு 100 விழுக்காடு அளவுக்குச் சொத்து வரியை உயர்த்தியவுடன், “சொத்துக்கு வரியா ? அல்லது சொத்தைப் பறிக்க வரியா?” எனக் கேள்வியெழுப்பிய ஐயா ஸ்டாலின் அவர்கள், தற்போது ஆட்சி பொறுப்பேற்று முதல்வரானப் பிறகு, 150 விழுக்காடு வரை வரியை உயர்த்தியிருப்பது எவ்வகையில் நியாயம்? ‘இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’ என்று ‘தமிழ்மறை’ திருக்குறள் கூறும் நல்லரசுக்கான வரைவிலக்கணத்திற்கு இணங்க, மண்ணையும் மக்களையும் பாதிக்காத வகையில் திட்டங்களைத் தீட்டி, உற்பத்தியைப் பெருக்கி, அதன் மூலம் நிலைத்த வளமான பொருளாதாரக்கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அதைச் செய்யத் தவறி, மக்களைக் கசக்கிப் பிழிந்து வரியை வசூலித்து அதன் மூலம் ஆட்சிபுரிய நினைப்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

ஆகவே, மக்களை வாட்டி வதைக்கும் வகையில் மிகக்கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனவும், அரசின் நிதியாதாரத்துக்கு மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்துக்கான திட்டங்களை வகுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response