தமிழீழப் பகுதிகளில் எரிசக்தித் திட்டங்கள் – சீனாவிடமிருந்து இந்தியாவுக்குக் கைமாற்றிய இலங்கை

கடந்த ஆண்டு சனவரி மாதம் தமிழீழம் யாழ்ப்பாணத்தில் உள்ள நைனா தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை நிறைவேற்ற சீனாவைச் சேர்ந்த சினோசோர்-எடெக்வின் என்ற நிறுவனத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இது ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) ஆதரவுடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நடக்கும் மிகப்பெரிய மின்னுற்பத்தித் திட்டமாகும்.

இந்தத் திட்டப்பணிகளை தமிழகத்தை ஒட்டிய பாக் வளைகுடா பகுதியில் சீன நிறுவனம் அமைக்க ஒப்புதல் அளிப்பது இப்பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கும் என இந்திய அரசு அப்போதே தனது அதிருப்தியை இலங்கை அரசுக்குத் தெரிவித்தது.

இந்நிலையில் இந்தத் திட்டப் பணிகளை கடனுக்குப் பதிலாக மானிய அடிப்படையில் நிறைவேற்றித் தர இந்தியா முன்வந்தது. இதையடுத்து இப்பணிகளை மேற்கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இலங்கை அரசு நிறுத்தி வைத்திருந்தது.

இதனிடையே கடல்சார் மீட்பு கூட்டு மையம் (எம்ஆர்சிசி) அமைக்க இந்தியா, இலங்கை அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதனால் இப்பகுதியில் கூட்டாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், வடக்குப் பகுதியில் உள்ள பாய்ன்ட் பெட்ரோ, பெசாலை, குருநகர் பகுதிகளில் மீன்பிடி துறைமுகம் அமைக்க இந்தியா உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த 3 மின்திட்டப் பணிகளை இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசு வழங்கியது.இதற்கான ஒப்பந்தம் நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் முன்னிலையில் கையெழுத்தாகின.

ஏற்கெனவே என்டிபிசி நிறுவனம் கிழக்கு சம்பூர் நகரில் சூரிய மின்னுற்பத்தி திட்டப் பணியை அமைப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. அதேபோல அதானி குழுமம் வடக்கு பிராந்தியத்தில் மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் மின்னுற்பத்தித் திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுதொடர்பாக, இலங்கைக்கான சீன தூதர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, இலங்கையின் இந்த நடவடிக்கை வெளிநாட்டு முதலீட்டைப் பாதிக்கும் என குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Response