தஞ்சாவூரில் தமிழக ஆளுநர் – மக்களை வதைக்கும் காவல்துறை

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று மதியம் தஞ்சைக்குச் சென்றுள்ளார்.அங்கு அவர் சுற்றுலா ஆய்வு மாளிகைக்குச் சென்று மதிய உணவை முடித்துக் கொண்டு முன்னாள் படை வீரர்களைச் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து மாலையில் தஞ்சை பெரிய கோவில், சரஸ்வதி மகால் நூலகம் ஆகிய இடங்களுக்குச் செல்ல உள்ளார். அதன் பின்னர் இரவில் தஞ்சை சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.

இதனால் பாதுகாப்பு என்கிற பெயரில், பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பெரிய கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சீருடை இல்லாத காவல்துறையினர் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் சரஸ்வதி மகால் நூலகம் உள்ளிட்ட நகர் முழுவதும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தஞ்சாவூர் மக்களைக் கடும் அதிருப்திக்கு ஆளாக்கியிருக்கிறது.

இதுதொடர்பாக தமிழரசுப் பேரவை அமைப்பாளர் பனசை அரங்கன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவருடைய பதிவில்….

தஞ்சாவூர் நகரத்துக்கு தமிழ்நாடு கவர்னர் வருகிறார் என்பதற்காக இன்று காலை முதல் இந்த நிமிடம் வரையில் சாலையோரக் கடைகளை அப்புற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்துள்ளார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வியாபாரம் பாதிக்கப்பட்டு பெரும் துயருக்கு ஆளானவர்களை கவர்னர் வருகிறார் என்பதற்காக வியாபாரிகளை துன்புறுத்தி வியாபாரம் செய்ய விடாமல் தடுத்தது கொடூரமான செயல் ஆகும்.

சாலையில் நடந்து செல்பவர்களை அச்சுறுத்தி கொடுமைப்படுத்தி கவர்னரின் வருகைக்காக செயல்பட்டது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் தஞ்சை நகரம் வருகை தந்தபோது சரஸ்வதி மகால் நூலகத்தை பார்வையிடச் சென்றார் அப்போதுகூட இவ்வளவு கெடுபிடிகளைக் காட்டவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாக செயல்படும் கவர்னருக்கு இவ்வளவு பெரிய பாதுகாப்பு என்பது தமிழக மக்களை முட்டாள் ஆக்கும் செயலாகும்.

சாதாரண மக்களுக்கு இல்லாத பாதுகாப்பு மக்களின் வரிப் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழுகிற கவர்னருக்கு தரப்படுவது ஏன்?

கி.நா.பனசை அரங்கன்
அமைப்புச் செயலாளர்
தமிழரசுப் பேரவை
12.03.2022

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response