சசிகலா டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க ஓபிஎஸ் சம்மதம் – அதிமுகவில் பரபரப்பு

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 21 மாநகராட்சிகளில் ஒரு இடத்தில் கூட மேயர் பதவியைக் கைப்பற்றாதது, நகராட்சி, பேரூராட்சிகளிலும் 90 விழுக்காட்டிற்கும் மேல் தோல்வியைத் தழுவியது உள்ளிட்டவைகளால் அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நேற்றிரவு அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுக தேனி மாவட்டச் செயலாளர் சையதுகான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மற்றும் ஒன்றிய, நகரச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. எனவே, சசிகலா, டிடிவி.தினகரன் மற்றும் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை, மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டுமென நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 5 ஆம் தேதி தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூடி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்டச் செயலாளர் சையது கான் கூறுகையில்,

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இதற்குக் கட்சி பிரிந்ததே முக்கிய காரணம். எனவே, சசிகலா, டிடிவி.தினகரன் மற்றும் விலகிச் சென்ற நிர்வாகிகளை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டுமென ஓபிஎஸ்சிடம் வலியுறுத்தினோம். இதுதொடர்பாக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம் என்றார்.

மீண்டும் சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் தலைமையில் நிர்வாகிகள் விவாதித்துள்ளதால் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response