உக்ரைனில் கர்நாடக மாணவர் உயிரிழக்க நீட் தேர்வு காரணம் – முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு

இரசியா உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கிறது.ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடரும் போரில், உக்ரைனின் கார்கிவ் நகரில் மார்ச் 1 ஆம் தேதி காலை இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் ஹாவேரியைச் சேர்ந்த நவீன் சேகரப்பா (வயது 21) என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் அவர். நவீன் சேகரப்பா ஒரு மளிகைக் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, அவர் குண்டு வீச்சில் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என தகவல் வெளியானது. இதனை ஒன்றிய அரசும் உறுதி செய்தது. அவரின் உயிரிழப்பால் இந்தியா சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்புக்கு நீட் தேர்வும் ஒரு காரணம் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது…

பள்ளியில் நன்றாகப் படித்து 97% மதிப்பெண் பெற்ற மாணவன் நவீனுக்கு, இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. தனது மருத்துவக் கனவை நிறைவேற்றவே நவீன் உக்ரைன் சென்றார். நீட் தேர்வை வைத்து பயிற்சி மையங்கள் இலாபம் பார்க்கின்றன. நுழைவுத் தேர்வுகளால் உயர்கல்வி என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டு, ஏழைகளுக்கு மறுக்கப்படுகிறது.

தகுதி என்ற போர்வையில் திறமையான, பொருளாதார ரீதியாக நலிவடைந்த கிராமப்புற மாணவர்களுக்கு அநீதி விதிக்கப்படுகிறது. நீட் தேர்வு பயிற்சி மையங்களின் பின்னணியில் இருப்பது யார்? என்பது தெரியவில்லை. பின்னணியில் மத்திய அரசு செயல்படுகிறதா என சந்தேகம் உள்ளது. மாணவர்களின் நலனுக்காக நீட் தேர்வை எதிர்த்துப் போராடிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response