இலங்கைக்குக் கோடிக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுப்பது ஏன்? – மோடி அரசுக்கு பழ.நெடுமாறன் கேள்வி

தமிழக மீனவர்களை வேட்டையாடும் இலங்கை நட்பு நாடா? என்று இந்திய அரசுக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்….

இலங்கை அரசுக்கு மிகவும் நம்பிக்கையானதும், உண்மையானதுமான நட்பு நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது என இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பீரிஸ் கூறியிருக்கிறார்.

இந்திய அரசு இலங்கை அரசுக்கு 2400 கோடி ரூபாய் பெறுமான நிதியுதவி அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

ஆனால், தமிழக மீனவர்களை தனது நட்பு நாடான இந்தியாவின் குடிமக்களாக இலங்கை அரசு கருதவில்லை. மன்னார் வளைகுடாவில் நமது மீனவர்கள் தொடர்ந்து சிங்களக் கடற்படையால் வேட்டையாடப்படுகிறார்கள். ஆடு, மாடுகளை ஒருவருக்கும் தெரியாமல் ஓட்டிச் செல்லும் திருடர்களைப் போல சிங்களக் கடற்படை தமிழக மீனவர்களை ஓட்டிச் சென்று சிறையில் அடைக்கிறது, சித்திரவதை செய்கிறது, சுட்டுக் கொலை செய்யவும் தயங்குவதில்லை. ஆனால், இந்தியாவின் கடலோரக் காவல்படையோ அல்லது கடற்படையோ நமது மீனவர்களைப் பாதுகாக்க இதுவரை முன்வரவில்லை.

இந்திய குடிமக்களான தமிழ்நாட்டு மீனவர்களைச் சிறைப்பிடித்துச் செல்லும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு கோடிக்கணக்கில் நிதியை அள்ளி அள்ளிக் கொடுக்கிறது. இந்திய அரசின், தமிழக மீனவர்களுக்கு எதிரான இந்தப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response