ஆதார் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்தால் ஏற்படும் 3 முக்கிய ஆபத்துகள் – திருமாவளவன் பட்டியல்

தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021, வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களிடமும், புதிதாக வாக்காளர்களாக சேருவோரிடமும் ஆதார் எண்ணைக் கேட்டுப்பெற வழிவகை செய்யும். இந்த மசோதாவை மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ,நியாயமாக வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்றார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

மத்திய அரசு மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தியுள்ள தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது அதை தெரிவுக்குழு பரிசீலனைக்கு அனுப்பவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டங்களில் நான்கு திருத்தங்களைச் செய்வதற்கு சட்ட திருத்த மசோதா ஒன்றை மோடி அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் விவரங்களை இணைப்பது கட்டாயம் ஆக்கப்படுகிறது.

ஏற்கனவே ‘புட்டசாமி வழக்கில்’ உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு ஆதார் விவரங்களைச் சமூக நலத்திட்டங்கள் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயன்றபோது அதே உச்ச நீதிமன்ற அமர்வு அதற்குத் தடை விதித்ததையும் தற்போது சுட்டிக்காட்டுகிறோம்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் இந்த சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும் அல்லது இந்த மசோதாவைத் தெரிவுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,
1. வாக்காளர்களை மதம், சாதி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துவதற்கும் (ப்ரொஃபைலிங்), 2.அவர்களை மதம், சாதி அடிப்படையில் குறி வைத்துப் பிரச்சாரம் மேற்கொள்வதற்கும்,
3.குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகளைப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கும் வழி ஏற்படுத்திவிடும்.

இதனால் நாடாளுமன்ற ஜனநாயகம் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகும். எனவே, இந்த சட்டத் திருத்த மசோதாவை மோடி அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் மோடி அரசின் இந்த மக்கள் விரோத சட்ட மசோதாவைத் திரும்பப் பெறுமாறு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response