கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி மற்றும் சேலத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாசு,
தேர்தல் கூட்டணி என்றாலே பயமாக இருக்கிறது. காலை வாருவதுதான் கூட்டணியாக உள்ளது. கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால், அந்தக் கட்சி கூட்டணி தர்மத்தை மதிப்பதில்லை. கடந்த தேர்தலில் குறைந்தபட்சம் 15 தொகுதிகளாவது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 5 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்திருக்கிறோம். இனிமேல் இது போன்ற துரோகக் கூட்டணிக்குச் செல்லக் கூடாது
என்று பேசியிருந்தார்.
டிசம்பர் 15 அன்று, சேலத்தை அடுத்த ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில்….
அதிமுக கூட்டணியில் இருந்தபோது துரோகம் செய்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாசு கூறியுள்ளார். அப்படி என்ன துரோகம் செய்தோம் என்பதை அவர்தான் விளக்க வேண்டும். கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம். பாமக வேட்பாளர்களுக்கு நீங்களும், நானும் மட்டும் ஓட்டுப் போட்டால் போதாது. மக்களும் ஓட்டுப்போட வேண்டும். மக்கள் ஓட்டுப்போடாததால் பாமக வேட்பாளர்கள் தோற்றார்கள். தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை. எங்கள் கூட்டணியில் அவர்கள் இப்போது இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மருத்துவர் இராமதாசுக்குப் பதிலடி கொடுத்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்திருப்பது அதிமுக-பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.