தமிழர் என்ற அடையாளத்தை எதற்காகவும் விட்டுவிடாதீர்கள்-பெங்களூர் பேராசிரியர் பேச்சு

பெங்களூரில் உள்ள மவுன்ட் கார்மல் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறையின் சார்பில்,  கல்லூரி வளாகத்தில் நவம்பர் 20 வெள்ளிக்கிழமை நடைபெற்ற “தமிழ் அமிழ்தம்’ என்ற ஆண்டு விழாவில் கலையும் கலாசாரமும் என்ற தமிழ்க் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளை தொடக்கிவைத்து அவர் பேசியது:

எங்கள் கல்லூரியில் கர்நாடகம் தவிர தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த பல்வேறு மாணவிகள் தமிழ் பயின்று வருகிறார்கள். இந்த மாணவிகள் தமிழ் மொழி மீது அளவிட முடியாத அளவுக்கு ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழ் மொழி மீது பற்று இருப்பதோடு மட்டுமல்லாது, நமது மொழி, கலை, கலாசாரத்தின் தொன்மை, பன்மை, வளமையை அறிந்து கொள்வதிலும் ஆர்வமாக உள்ளனர். அதன்காரணமாக ஆண்டுதோறும் தமிழ் அமிழ்தம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.

மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், கண்காட்சியைப் பார்த்த பிறகு, இளைய சமுதாயத்தின் கரங்களில் தமிழ் மொழி பாதுகாப்பாக இருப்பதாக மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். தமிழ் மெல்ல இனி சாகும் என்ற சொலவடையை தமிழ் மெல்ல இனி நீண்ட நாள் வாழும் என்று இன்றைய இளம் தலைமுறையினர் மாற்றியமைத்து வருகிறார்கள்.

காலங்களை வெல்லும் கூறுகள் தமிழ் மொழிக்கு இருப்பதால்தான் எத்தனையோ கலாசாரப் படைப்புகளையும் தாண்டி தமிழ் நிலைத்து சீரிளமையாக உள்ளது.

இன்றைய இளம்தலைமுறையினரிடையே தமிழ் குறித்த எழுச்சியை உருவாக்க வேண்டியது அவசியமாகும். கர்நாடகத்தில் வாழும் தமிழர்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதில்லை. இது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகும்.

ஆங்கிலம், கன்னடம், சம்ஸ்கிருதம், ஹிந்தி என எந்த மொழியை வேண்டுமானாலும் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். அத்துடன் தமிழ் மொழியை மறக்காமல் சொல்லிக் கொடுங்கள் என்பதுதான் எங்கள் அன்பான வேண்டுகோளாகும். நீங்கள் எங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும், என்னவாக இருந்தாலும் தமிழர்களாக இருங்கள். அந்த அடையாளத்தை எதற்காகவும் சமரசப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்றார்.

விழாவில், சம்ஸ்கிருதத் துறைத் தலைவர் ஜோதிர்மயி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில், மாணவியரின் பாரதியின் புதுமைப்பெண், சீரிளமைத் தமிழ், தமிழர் நாட்டியங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழர் கலை, கலாசாரத்தை விளக்கும் கண்காட்சிக்கும், தமிழர் விருந்தோம்பலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a Response