பிரபாகரன் பிறந்தநாள் குருதிக்கொடை முகாமுக்குத் தடை – பழ.நெடுமாறன் கண்டனம்

குருதிக் கொடை முகாமுக்கு காவல்துறை தடை விதித்ததற்கு பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மன்னார்குடியில் தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் நவம்பர் 26 ஆம் நாள் குருதிக் கொடை முகாம் ஒன்றுக்கு தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் மரு. பாரதிசெல்வன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அதற்குக் காவல்துறை அனுமதித் தர மறுத்துத் தடை செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கடந்த பல ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரபாகரன் பிறந்த நாளில் குருதிக் கொடை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மன்னார்குடியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக குருதிக் கொடை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், திடீரென இந்த ஆண்டு முகாமுக்குத் தடை செய்திருப்பது மக்கள் உரிமைகளைப் பறிப்பதாகும்.

ஆனாலும், குருதிக் கொடை அளிக்க முன்வந்த அனைவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குருதிக் கொடை வழங்குவதற்கு மரு. பாரதிசெல்வன் ஏற்பாடு செய்ததைப் பாராட்டுகிறேன்.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றவே குருதிக் கொடைகள் மனமுவந்து மக்களால் அளிக்கப்படுகின்றன. குருதிக் கொடை முகாமுக்கு காவல்துறை விதித்த தடை என்பது மக்களின் உயிர்களைக் காப்பாற்ற முன்வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையாகும். காவல்துறையின் இந்த தான்தோன்றித் தனமான போக்கினைக் கண்டிக்க தமிழக முதல்வர் முன்வரவேண்டுமென வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response