செப்டம்பர் மாத இறுதியிலிருந்து பெட்ரோல் டீசல் விலை நாள் தோறும் உயர்ந்துவந்தது.
இதனால் வரலாறு காணாத விலைக்கு பெட்ரோலும் டீசலும் விற்கப்பட்டன.
இதனால், அல்லலுற்று ஆற்றாது அழுது கொண்டிருந்தனர் மக்கள்.
இந்நிலையில்,
தீபாவளி பண்டிகையையொட்டி, ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக நவம்பர் 3 ஆம் தேதி இரவு அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி, பெட்ரோலுக்கான கலால் வரியில் ரூ.5 ம், டீசலுக்கான கலால் வரியில் ரூ.10 ம் ஒன்றிய அரசு குறைத்துள்ளது.
இந்த உத்தரவு நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
அதனால் நவம்பர் 4 அதிகாலையில் இருந்து நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5ம், டீசல் லிட்டருக்கு ரூ.10ம் குறைந்தது.
வரி குறைப்புக்குப்பின் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 5 ரூபாய் 26 காசுகள் குறைந்து 101 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 16 காசுகள் குறைந்து 91 ரூபாய் 43 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த பத்துநாட்களாக இந்த விலையில் மாற்றமின்றி தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு மக்கள் மேலும் மகிழ்ச்சியடையும் விதமாக பெட்ரோல் டீசல் மீதான தமிழ்நாடு அரசின் வரியை மேலும் குறைக்க முடிவு செய்துள்ளாராம் மு.க.ஸ்டாலின்.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்தத் தகவல் வெளியே கசிந்ததால் ஒரு சிக்கலும் ஏற்பட்டுவிட்டது.
ஏற்கெனவே மோடி ஒரே இரவில் விலை குறைப்பு அறிவிப்பை அமல்படுத்தியதால் தமிழ்நாடெங்கும் பெட்ரோல் விற்பனையாளர்கள் கடும் நட்டத்தைச் சந்தித்தனர்.
சுமார் 300 கோடி நட்டம் ஏற்பட்டதென்கிறார்கள்.
அதனால் பாதிப்புக்குள்ளான டீலர்கள், இப்போது தமிழ்நாடு அரசு வரிக்குறைப்பு தகவலால் விழிப்படைந்துவிட்டார்களாம்.
நிறைய வாங்கினால் நிறைய நட்டம் என்பதால் குறைவாக வாங்குகிறார்களாம்.திடீரென அறிவிப்பு வந்தாலும் தாங்கவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்களாம்.
இதனால் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டீலர்கள் பற்றிக் கவலையே படாமல் மோடி செய்த வேலையால் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
பல விசயங்களில் முன்னுதாரண முதல்வராகத் திகழும் மு.க.ஸ்டாலின், வரி குறைப்பு அறிவிப்பு வெளியிடும்போதே டீலர்களுக்கு ஏற்படும் இழப்பும் ஈடுகட்டப்படும் என்று அறிவித்தால் பெரும் புகழடைவார் என்பதில் மாற்றமில்லை.