திமுக ஆட்சியிலும் தமிழ் தெரியாத வெளிமாநிலத்தாருக்கு அரசு வேலை வாய்ப்பு – கி.வெங்கட்ராமன் கண்டனம்

அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் வெளி மாநிலத்தவரை மீண்டும் அனுமதிக்கக்கூடாது என்றும் தேர்வு அறிவிப்பைத் திருத்தி வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….

தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு வரும் 2021 அக்டோபர் 28, 29, 30 ஆகிய நாட்களில் நடக்கவுள்ளதாக ஆசிரியர் பணித்தேர்வு வாரியம் (Teachers Recruitment Board – TRB) அறிவித்துள்ளது. வெளி மாநிலத்தவர் பங்கேற்பால் ஏற்கெனவே இரத்தாகி, இரண்டாம் முறையாக நடைபெறும் அத்தேர்வில் மீண்டும் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த 2017இல் இதே பணியிடங்களுக்காக நடந்த தேர்வில், தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர் பெருமளவில் தேர்வானதை அம்பலப்படுத்தி 10.11.2017 அன்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் அதனைக் கண்டித்தனர். வெளி மாநிலத்தவரை நீக்கிவிட்டு புதிய பட்டியல் வெளியிடாவிட்டால், வெற்றி பெற்றோருக்கு 2017 நவம்பர் 23 அன்று நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பை முற்றுகையிட்டுத் தடுப்போம் என்று மணியரசன் அறிவித்தார்.

இதனையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு அரசாலேயே ஒத்தி வைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இதில் தலையிட்டு, அத்தேர்வை இரத்து செய்ததுடன் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 27.11.2019 அன்று, இதே 1060 பணியிடங்களுக்கான மறுத்தேர்வு அறிவிப்பு (அறிவிப்பு எண் – 14/2019) வெளியிடப்பட்டது. தமிழ் தெரியாதோரும் இத்தேர்வை எழுதலாம் என்று கடந்த முறை (2017) அறிவிப்பு வெளியிட்டதால்தான் வெளி மாநிலத்தவர் இத்தேர்வில் பங்கேற்று முறைகேட்டில் ஈடுபட்டனர் என்ற நிலையில், 2019இல் வெளியிடப்பட்ட அறிவிப்பும் அதே விதியைக் கொண்டிருந்தது. எனினும் தேர்வு நாள் அறிவிக்கப்படவில்லை.

கொரோனா முடக்கம் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக நடைபெறாத அத்தேர்வு, தற்போது இம்மாதம் அக்டோபர் 28, 29, 30 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய அறிவிப்பின்படியே இத்தேர்வு நடைபெறவுள்ளதால் மீண்டும் இத்தேர்வில் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்கும் நிலை உள்ளது. வெளி மாநிலத்தவர்கள் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகத் தேர்வானால், கிராமப்புறங்களில் தமிழ்வழியில் படித்துவிட்டு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரும் தமிழ் மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர். தமிழ் மாணவர்களின் வேலை வாய்ப்பும் பறிபோகும்!

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற இந்தி மாநிலங்களில் இந்தியும், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கன்னடம் உள்ளிட்ட அத்தேசிய இன மொழிகளும் கட்டாயமாக்கப்பட்டு, மண்ணின் மக்கள் மட்டுமே அரசுத் தேர்வெழுத முடியும் என்ற நிலை உள்ளபோது, தமிழ்நாட்டில் மட்டும் வந்தரெல்லாம் தேர்வெழுதலாம் என்ற விதி இன்றும் மாற்றப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல தமிழ் மக்களின் வாழ்வுரிமையையும் பறிக்கும் செயலாகும்!

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தேர்வுக்கான அறிவிப்பை இரத்து செய்துவிட்டு, தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி மறுத்தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், அக்டோபர் 28, 29, 30 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள தேர்வில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பதைத் தமிழ்நாடு அரசு தடுத்து ஆணையிட வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response