மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் – அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட 422 வழக்குகள் மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான 446 வழக்குகள் ஆகியவற்றைத் திரும்பப் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில்,

“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 24.6.2021 அன்று சட்டசபையில், கவர்னர் உரையின் மீதான விவாதத்துக்கு அளித்த பதிலுரையில் ‘கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள், மீத்தேன் – நியூட்ரினோ – கூடங்குளம் அணு உலை – சேலம் எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்’ என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, 5,570 வழக்குகள் ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 13-9-2021 அன்று காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பினையும் செயல்படுத்தும் வகையில், நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 446 வழக்குகளும், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 422 வழக்குகளும், ஆக மொத்தம் 868 வழக்குகளைத் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல்நடவடிக்கைகளையும் கைவிடவும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆணையிட்டுள்ளார்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response