மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் பாராட்டு

தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதியை சமூகநீதிநாள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

இதை வரவேற்று திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகடனம் ஒன்றை அறிவித்திருக்கிறார். பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாடு அரசே ‘சமூக நீதி நாள்’ என்று கொண்டாடும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கிறார். தலைமைச் செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஜாதி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்படும் என்று, அற்புதமான உறுதிமொழி வாசகத்தையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். உறுப்பினர்கள் அனைவரும் நீண்ட நேரம் மேசையை தட்டி வரவேற்று இருக்கிறார்கள்.

இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றத் தலைவராக இருக்கின்ற நயினார் நாகேந்திரன்,’நாங்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள் ஆனாலும் இந்த தீர்மானத்தை, இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். அனைத்து கட்சியினரும் ஒருமனதாக ஆதரித்து இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது என்பது பெரியார் இந்த சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டிற்கு கிடைத்திருக்கிற மகத்தான பரிசு.

பெரியார் மறைவுற்ற நேரத்தில் கலைஞர் கூறினார், ‘ பெரியாருடைய சுற்றுப் பயணம் முடிவுற்றது.’ அது ஒரு இலக்கிய வாசகம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அதை நினைவுபடுத்தி ‘பெரியார் சுற்றுப்பயணத்தை நாம் தொடர்வோம்’ என்று அறிவித்திருக்கிறார்.

சமூக நீதியாளர்கள், மானுடப் பற்றாளர்கள், ஜாதி ஒழிப்பாளர்கள், பெண்ணியவாதிகள், ஒடுக்கப்பட்ட மக்கள், விளிம்பு நிலை மக்கள் அத்தனை பேரும் தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பை வரவேற்பார்கள், பாராட்டுவார்கள், நாமும் இந்த அறிவிப்பை பாராட்டி மகிழ்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response