மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பத்திரிகையாளர்களின் குடும்பங்களும் சேர்க்கப்படும்
என தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு
சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) நன்றி தெரிவித்துள்ளது.
அதோடு தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு முக்கிய கோரிக்கையையும் வைத்துள்ளது.
அதுதொடர்பாக, செயலாளர் எல்.ஆர்.சங்கர் மற்றும் பொருளாளர் வி.மணிமாறன்
ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்…..
தமிழக சட்டமன்றத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில்
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின்
குடும்பத்தினரும் சேர்க்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பயன்பெறுவதற்கான வருமான உச்சவரம்பு
பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு பொருந்தாது
என்றும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் (MUJ) தொடர்ந்து வலியுறுத்தி வரும்
இந்தக் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற முன்வந்திருப்பதற்கு மகிழ்ச்சியையும்
பாராட்டுகளையும்
தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேநேரத்தில், இந்த அறிவிப்பில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்
மட்டுமே பயன்பெற முடியும்
என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி 95 விழுக்காடு பத்திரிகையாளர்கள் இந்தத் திட்டத்தால் எந்தப் பயனையும்
அடைய முடியாது.
பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களில் ஆசிரியர், செய்தி ஆசிரியர்,
இணை ஆசிரியர், உதவி ஆசிரியர், சிறப்பு செய்தியாளர், தலைமைச் செய்தியாளர்,
புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர்,
பத்திரிகை வடிவமைப்பாளர், செய்தி தயாரிப்பாளர் இப்படி பல்வேறு பதவிகளில்
ஏராளமானோர் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு எல்லாம் அரசு அங்கீகார அட்டை கொடுக்கப்படுவதில்லை.
வெளியில் சென்று செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள், ஒளிப்படக் கலைஞர்கள்,
ஒளிப்பதிவாளர்களில் கூட பெரும்பாலானோர் அரசு அங்கீகார அட்டை வைத்திருப்பதில்லை.
அரசு விழாக்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில்,
செய்தி சேகரிப்பதற்காகச் செல்பவர்களுக்கு வழங்கப்பட்ட
அரசு அங்கீகார அட்டையை அடிப்படையாக வைத்து
திட்டங்களை அறிவிப்பது 5 விழுக்காடு பத்திரிகையாளர்கள் மட்டுமே பயனடைய உதவும்.
எனவே, உழைக்கும் பத்திரிகையாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
என சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் (MUJ) கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.