ஓபிஎஸ் மனைவி மறைவு – நேரில் சென்ற சசிகலா முற்றிலும் புறக்கணித்த டிடிவி.தினகரன்

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் குணமடைந்து, இன்று (செப்டம்பர் 01) வீடு திரும்ப இருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதயநோய் நிபுணர்கள் அவசர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி காலை 6.45 மணிக்கு விஜயலட்சுமி உயிரிழந்தார்.

விஜயலட்சுமியின் உடல் இன்று தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நாளை (செப்டம்பர் 02) அடக்கம் செய்யப்பட உள்ளது என்று அதிமுகவினர் தெரிவித்தனர்.

மறைந்த விஜயலட்சுமியின் உடலுக்கு சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், உதயநிதி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில்,யாரும் எதிர்பாராத வகையில் சசிகலாவும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தார். ஓபிஎஸ் கண் கலங்கியபோது, அவரது கைகளைப் பிடித்து சசிகலா ஆறுதல் தெரிவித்தார்.

நான்காண்டுகளுக்கும் மேலாக அரசியலில் நேரெதிராக இருந்த ஓபிஎஸுக்கு நேரில் சென்று சசிகலா ஆறுதல் கூறியது அரசியல்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், டிடிவி.தினகரன் சமூகவலைதளங்கள் மூலம் இரங்கல் கூடத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response