காணாமல் போன 85 கோடி மதிப்புள்ள நிலக்கரி – முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குச் சிக்கல்

மின் உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல் மின்நிலையத்தில் உள் ஒதுக்கீடு மற்றும் வெளி ஒதுக்கீடு கிடங்குகளில் சேமிக்கப்பட்டு வருகிறது.

வெளி ஒதுக்கீடு கிடங்கில் வைக்கப்படும் நிலக்கரிகள் தொடர்வண்டி மூலம் மேட்டூர் அனல் மின் நிலையங்களின் பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. உள் ஒதுக்கீடு கிடங்குகளில் உள்ள நிலக்கரி வடசென்னை அனல் மின்நிலையத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி கிடங்குகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ராஜேஷ் லக்கானி, கும்மிடிப்பூண்டி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். டி.ஜெ.கோவிந்தராஜன் மற்றும் மின்வாரிய தலைமைப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது……

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மின்சார வாரியத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். அதில் போற்றுதலுக்குரிய நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து வடசென்னை அனல் மின் நிலையம் அலகு-1 தொடர் மின்சார உற்பத்தியைச் செய்து சாதனை படைத்து வருகிறது.

இந்த நேரத்தில் ஒரு வருத்தப்பட கூடிய செய்தி, நிலக்கரிக் கிடங்கில் இருப்பு சரிபார்க்கப்பட்டது. அப்படி சரிபார்க்கப்பட்டதில் வடசென்னை அனல் மின்நிலையத்தில் மட்டும் 2 இலட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும், இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த இருப்பைச் சரிபார்க்கக் கூடிய பணியை இயக்குநர் (உற்பத்தி), இயக்குநர் (விநியோகம்) மற்றும் தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரி ஆகிய 3 பேர் சேர்ந்து கடந்த 6, 8 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் அடிப்படையில் 2 இலட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பில் இல்லை என்ற தகவல் வரப்பெற்றுள்ளது.

இது முதற்கட்ட ஆய்வுதான். தொடர்ந்து முழுவதுமாக ஆய்வு செய்து என்னென்ன முறைகேடுகள் நடந்திருக்கின்றன. எப்படி இந்த நிலக்கரி இருப்பு பதிவேட்டில் இருப்பதற்கும், கையிருப்பில் இருப்பதற்கும் வித்தியாசம் வருகிறது?. இதில் என்ன தவறு நடந்திருக்கிறது என்பதை முழுவதுவாகக் கண்டறியப்பட்டு நிச்சயம் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான விரிவான விசாரணை நடைபெறுகிறது.

இதேபோல் தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையங்களில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு அறிக்கை பெற்றவுடன் அதன் உண்மை நிலவரங்கள் தெரிவிக்கப்படும். தற்போது இந்த இருப்பு விவரம் 31.3.2021 வரை பதிவேட்டில் எடுக்கப்பட்ட கணக்குகளின் அடிப்படையில் 2 இலட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல் இருக்கிறது. இதனுடைய மதிப்பு ரூ.85 கோடி இருக்கும்.

ஆளுநர் உரையில் கடந்த சில ஆண்டுகளாக மின்வாரிய நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் ஆய்வு செய்யப்படும் என மிகத்தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள். யாரும் தப்பிக்க முடியாது. நன்கு உழைக்கக் கூடிய அதிகாரிகள், மின்வாரியத்தில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அவர்களுடைய உழைப்பெல்லாம் வீணடிக்கப்பட்டு சீர்கெட்ட நிர்வாகத்தால் ரூ.1 இலட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மின் கட்டணம் சரியான வகையில் மின் உற்பத்தி செய்யப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்க, சேவை செய்யக்கூடிய வாரியத்தில் இவ்வளவு பெரிய தவறுகள், முறைகேடுகள் நடந்து இருக்கிறது. கடந்த கால அரசில் மோசமான நிர்வாகம் நடந்து இருக்கிறது. அப்படிப்பட்ட மோசமான நிலையில் இருந்து நிர்வாகத்தை மீட்டெடுத்து வரக்கூடிய காலங்களில் தவறுகள் அனைத்தும் களையப்பட்டு வெளிப்படையான நிர்வாகத்தை மக்களிடம் மின்வாரியம் முன்னெடுக்க இருக்கிறது. இதுதான் முதலமைச்சரின் உத்தரவு.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மின்வாரியத்தின் மூலம் சுமைகளை ஏற்றக் கூடாது என்பதற்காகக் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் உத்தரவிட்டதால் இந்த ஆண்டு கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படவில்லை. இதனால் அந்த மின்கட்டணத்தின் உயர்வுகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

234 தொகுதிகளிலும் குறைவான மற்றும் உயர் மின் அழுத்தம் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 8 ஆயிரத்து 900 மின்மாற்றிகள் மாற்றியமைப்பதற்கு ரூ.625 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரையில் மின்சாரம் தொடர்பாக 2 இலட்சத்து 48 ஆயிரம் புகார்கள் வரப்பெற்றுள்ளது. இதில் 2 இலட்சத்து 36 ஆயிரம் புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இன்னும் 12 ஆயிரம் புகார்கள்தான் ஆய்வில் உள்ளது. 93 சதவீதம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் பேட்டியில் எண்பத்தைந்து கோடி மதிப்பிலான நிலக்கரி மாயமாகியுள்ளதால் அது முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்குச் சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

Leave a Response