முடிவுக்கு வருகிறதா எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் வாழ்க்கை? – கொடநாடு எஸ்டேட் வழக்கு விவரங்கள்

சில ஆண்டுகளுக்குப் பின் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. அதில், முன்னாள் முதல்வரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது இன்று சட்டமன்றத்தில் விவாதத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது.

நீலகிரியை அடுத்துள்ள கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ளது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட். 900 ஏக்கர் எஸ்டேட்டின் நடுவில் அமைந்திருக்கிறது கொடநாடு பங்களா. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பீட்டர் கிரேக் ஜோன்ஸ் என்பவருக்குச் சொந்தமான இந்த எஸ்டேட்டை, 1991ல் ஜெயலலிதா சசிகலா ஆகியோர் வாங்கினர். அது மிரட்டி எழுதி வாங்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.

2016 டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா இறந்தார் என்று அறிவிக்கப்பட்டது.அதன்பின், ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதலமைச்சர் ஆனார். டிசம்பர் 31 ஆம் தேதி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனதும் ஓபிஎஸ்ஸின் முதல்வர் பதவியைப் பறிக்கத் திட்டமிட்டார்.

2017 பிப்ரவரி 7 ஆம் தேதி மாலை ஜெயலலிதா சமாதி முன் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தினார் ஓபிஎஸ்.
முடிவில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் கிடைத்தது. பிப்ரவரி 15ஆம் நாள் சிறைக்குச் செல்லும்முன்பு சசிகலா, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக (அம்மா) அணியாகவும், ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுக (புரட்சித்தலைவி) அணியாகவும் உடைந்திருந்த அதிமுகவை, 21 ஆகஸ்ட் 2017 அன்று இரண்டு அணிகளையும் இணைத்தது பாஜக.

இந்த இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்ததுதான் கொடநாடு கொலை விவகாரம்.

ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் கார்டன் வேதா இல்லம், சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் ஆகிய சொத்துக்களுக்கு உளவுத்துறை, சிறப்புப் பாதுகாப்புப் படை என 640 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தார்கள். ஜெ. மறைவுக்குப் பிறகு, அரசு காவலர்களைப் பயன்படுத்துவது சர்ச்சையானது.
2017 ஏப்ரல் 24 ஆம் தேதி நள்ளிரவு இரண்டுமணிக்கு 11 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், கொடநாடு எஸ்டேட்டின் 10 ஆம் எண் கேட் வழியாக நுழைந்தது. காவலுக்கு இருந்த காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்துவிட்டு, பங்களாவிலிருந்து சில முக்கிய ஆவணங்களைக் கொள்ளை அடித்துச் சென்றது.

இந்தக் கொள்ளை மற்றும் கொலைச் சம்பவம் குறித்து, நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா விசாரணையைத் துவங்கினார். கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மற்றொரு காவலாளியான கிஷன்பகதூரிடமும் விசாரணை நடைபெற்றது.

முதற்கட்ட விசாரணை முடிவில், 3000 சவரன் தங்கமும், வைர நகைகளும், ஜெயலலிதா அறையில் இருந்த மூன்று சூட்கேஸ்களும் காணாமல்போனதாக செய்திகள் வெளியானது. கூடுதலாக மூன்று சூட்கேஸ்களில் ஜெயலலிதாவின் சொத்துப் பத்திரங்களும், உயில்களும் கொள்ளைபோனதாக ஊகங்களும் வெளியாயின.

ஜூலை 06, 2017, சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், கொடநாடு கொள்ளை சம்பவம் தொடர்பாகக் கேள்வி எழுப்பியபோது, ‘ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது. சிசிடிவி கேமிராக்கள் வேலை செய்யவில்லை. எந்த விலையுயர்ந்த பொருளும் கொள்ளை போகவில்லை” என்று பதில் அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை கொடநாடு கொலை-கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்பட்ட 10பேரின் பெயர்களை வெளியிட்டது. அதில் முக்கியவான இருவர் போயஸ்கார்டன் கார் டிரைவர் கனகராஜ் & கனகராஜின் நண்பன் திருச்சூர் சயன்.

தேடுதல்வேட்டையில் கேரளாவின் பாலக்காடு, மலப்புரம், வயநாடு ஊர்களை சேர்ந்த மனோஜ், தீபு, சதிஷன், சந்தோஷ், உதயகுமார், உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட, போயஸ்கார்டன் கார் டிரைவர் கனகராஜ்; சயன் இருவரும் அடுத்தடுத்த நாட்களில் வெவ்வேறு இடங்களில் விபத்தில் சிக்குகிறார்கள்.

ஏப்ரல் 28 2017. சேலம் ஆத்தூரில், பைக்கில் சென்ற கனகராஜ் எதிரில் வந்த கார் மோதி இறக்கிறார். சயன் பாலக்காடு அருகில் குடும்பத்தோடு மற்றொரு விபத்தில் சிக்குகிறார். அதில் சயனின் மனைவி குழந்தை இருவரும் உயிரிழந்தனர். சயன் உயிரோடு கோவை மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

சயனின் கார்விபத்து நடந்த்து கேரள மாநில எல்லைக்குள் என்பதால் விபத்து வழக்கில் கேரள காவல்துறை அவரை விசாரிக்க முயன்றது. ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தவிர்க்க முடியாத நிலையில், விபத்து குறித்து ‘மட்டும்’ விசாரிக்க கேரள காவல்துறைக்கு அனுமதி கிடைத்தது.

2008 முதல் போயஸ் கார்டனில் கார் டிரைவராகப் பணியாற்றின சேலம் மாவட்டம் எடப்பாடி சமுத்திரம் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கனகராஜ் குடும்பமும் பழனிசாமி குடும்பமும் பங்காளிகள் முறை. அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளர் மூலம் கனகராஜை போயஸ் கார்டனில் டிரைவராகச் சேர்ந்துள்ளார்.

கனகராஜின் விபத்து நடந்த்தாகச் சொல்லப்பட்ட இடம், தென்னங்குடி பாளையம் மலர் மெட்ரிக் பள்ளி அருகில். ஆனால், கனகராஜின் அண்ணன் அங்கு உடனடியாக சென்றபோது, அப்பகுதியில் விபத்து நடந்த அறிகுறியோ, கனகராஜ் ஓட்டிவந்த பைக், விபத்து ஏற்படுத்திய கார் எதுவும் இல்லை என்றார்.

“கொடநாடு கொள்ளையில் என் தம்பி சிக்க வைக்கப்பட்டிருக்கிறான். கொடநாடு கொள்ளை நடப்பதற்குமுன் தினமும் நான்கு மணி நேரத்திற்குமேல், எடப்பாடி ஊரில் இன்ஸ்பெக்டராக இருந்த சுரேஷ்குமாருடன் என் தம்பி போனில் பேசி இருக்கிறான்” என்று கனகராஜின் அண்ணன் சொல்லியிருந்தார்.

“எடப்பாடி காவல்நிலையத்தில் யார் இன்ஸ்பெக்டராக முடியும்? பழனிச்சாமிக்கு வேண்டப்பட்டவரைத் தவிர, இன்ஸ்பெக்டர் சுரேஸ்குமார் ஏன் என் தம்பியிடம் அடிக்கடி பேசவேண்டும். உண்மையில் என் தம்பி கனகராஜுக்கு நிகழ்ந்தது ஒரு விபத்து அல்ல; அது ஒரு என்கவுன்டர்” என்றும் கூறினார் கனகராஜ் அண்ணன் தனபால்.

“2017 ஏப்ரல் 28ம் தேதி இரவு 8.45 மணிக்கு நம்பர் ப்ளேட் இல்லாத ஸ்ளெண்டர் பைக்கில் சேலம் நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் வந்துகொண்டிருந்த போது, எனது கார் கனகராஜ் பைக் மீது மோதியது, அதில் அவர் இறந்துவிட்டார்” ரபீக் என்பவரின் வாக்குமூலம்.

2017 ஜூலை 3ம் தேதி, கொடநாடு பங்களாவில் ஆறு ஆண்டுகளாகக் கம்யூட்டர் ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த கோத்தகிரியைச் சேர்ந்த தினேஷ்குமார் காரணமே தெரியாமல் தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.

கொடநாடு எஸ்டேட் சம்பந்தப்பட்ட அடிமட்டப் பணியாளர்கள் ஒவ்வொருவராக கொலை, விபத்து, தற்கொலை என்று இறந்ததும் ஜெயலலிதா ஆவி பலிவாங்குகிறது என்று கதை கட்டப்பட்டது. மற்றொருபுறம், எஸ்டேட்டில் தினமும் தேயிலை திருடப்படுவதாக காவல்துறை பாதுகாப்பு போட்டது பழனிச்சாமி அரசு.

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை எஸ்டேட் சம்பந்தப்பட்டவர்கள் உதவி இல்லாமல் நடந்திருக்காது என்பது காவல்துறையின் முடிவு. காரணம் கொள்ளை நடந்த அன்று சிசிடிவி இயங்கவில்லை. மின்சாரம் தடைபட்டிருக்கிறது. ஜெயலலிதா கைரேகையால் திறக்கக்கூடிய லாக்கர்களில் முன்கூட்டியே அவை நீக்கப்பட்டிருந்தன.

எஸ்டேட்டின் பர்னிஸிங் கான்ட்ராக்டர் சஜீவன், எஸ்டேட் மேனஜர் நடராஜன் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். சஜீவன் சசிகலா-தினகரன் உள்ளிட்டோருக்கு நெருக்கமானவர். 900 ஏக்கர் எஸ்டேட்டைச் சுற்றியுள்ள நிலங்களில் சில இவரது உறவினர்கள் பெயரில் பதியப்பட்டிருக்கிறது.

மேனேஜர் நடராஜனிடம் நடந்த விசாரணையில், ஏற்கெனவே கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சிகள் நடந்துள்ளதும் அவை வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டதும் அம்பலமானது. மேலும் கைதுசெய்யப்பட்ட எட்டுபேரில் மனோஜ் என்ற சாமியார் பங்களாவில் பூஜைகள் செய்பவர் என்பதும் தெரியவந்தது.

சிறையிலிருந்த மனோஜ் உள்ளிட்டோர் ஜாமீன் கேட்டு மனு செய்தபோது, மனோஜ் சாமியாருக்கு ஹவாலா & கூலிப்படை தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மொத்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

வாளையாரைச் சேர்ந்த மனோஜ் கொடநாடு பங்களாவில் பூஜை செய்பவர். அவருக்கும் போயஸ் கார்டன் டிரைவர் கனகராஜுக்கும் அறிமுகம் உண்டு. கனகராஜ் சஜீவன் இருவரும் மனோஜ் மூலம் மலையாளம் பேசும் கூலிப்படை ஏற்பாடு செய்துள்ளனர். இவர்களே கொலை கொள்ளைச் சம்பவங்களைச் செய்தவர்கள் என்பது காவல்துறையின அறிக்கை.

டெல்லியிலிருந்து வெளிவரும் ‘தெஹல்கா’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ‘கொடநாடு விவகாரத்தை ஓர் ஆவணப் படமாக வெளியிட்டார். அதில், சயனும், கனகராஜ் குடும்பமும், மனோஜும் சில தகவல்களை தமிழிலும் மலையாளத்திலும் வெளியிட்டனர்.

“2000 கோடி மதிப்பிலான பணமும் நகையும் பங்களாவிற்குள் இருக்கிறது. அதோடு சேர்த்து அங்குள்ள ஆவணங்களையும் எடுத்துவரவேண்டும் என்பது எங்களுக்குச் சொல்லப்பட்ட திட்டம். அதற்கு எங்களைத் தயார்படுத்தியது பழனிச்சாமியின் உறவினரான கார் டிரைவர் கனகராஜ்.”

“எந்த நேரத்தில் பங்களாவுக்குள் நுழையவேண்டும். என்னென்ன பாதுகாப்புகள் உள்ளன, எந்தெந்த இடங்களில் ஆவணங்கள் இருக்கின்றன என்பது குறித்தெல்லாம் ஏற்கனவே கனகராஜுக்குத் தெரிந்திருந்தது. கனகராஜை பின்னால் இருந்து இயக்கியது எடப்பாடி பழனிச்சாமி”

மேத்யூஸ் சாமுவேல் ஆவணப்பட்த்தில் இவ்வாறு சயன் மற்றும் மனோஜ் பேட்டி கொடுத்த்தும் அவர்கள் மீது ‘அவதூறு பரப்பினர்’ என்று அதிமுக ஐடி விங் ராஜன்சத்யா வழக்கு தொடர்ந்தார். தமிழ்நாடு காவல்துறையை டெல்லிக்கு அனுப்பி இருவரையும் கைதுசெய்தார் பழனிச்சாமி.

அவதூறு வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று மனோஜ் சயன் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள். இருப்பினும் சயன் & மனோஜ் கொடநாடு சம்பவங்களில் சாட்சிகளைக் கலைக்கக்கூடும் என்று அவர்கள் ஜாமீனை ரத்துசெய்ய முயன்றார் பழனிச்சாமி.

மேலும், ஆவணப்பட்த்தை வெளியிட்ட தெஹல்கா ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் மீது பழனிசாமி தரப்பினரால் 110 கோடி மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டது. கொடநாடு கொலைகளை சிபிஐ தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றினால் போதாது, சசிகலா வசமிருக்கும் சொத்துகளையும், ஆவணங்களையும் கைப்பற்றினாலே அதிமுகவின் நிஜமான அதிகாரத்தைத் தக்கவைக்க முடியும் என்கிற நிலையில் எடப்பாடி பழனிச்சாமியால் திட்டமிட்டு நடத்தப்பட்டதே இந்தக் கொள்ளை நாடகம் என்றும்,

அதற்குத் தேவையான ஆவணங்கள் அனைத்தும் கிடைக்க வேண்டிய கைகளுக்குப் போய் சேர்ந்ததும், கொள்ளையில் ஈடுபட்டவர்கள், அதற்கு உதவியவர்கள் ஆகியோரைத் திட்டமிட்டுக் கொலை செய்வதும் நடந்தேறின என்றெல்லாம் சொல்லப்பட்டன.

இந்த வழக்கு விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. அதில் சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றக் காவலில் இருந்த நிலையில் கடந்த மாதம் சயானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

தற்போது நிபந்தனை ஜாமினில் உதகையில் சயான் தங்கி வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். இந்த நிலையில் கடந்த 13 வழக்கு விசாரணையின் போது, கோத்தகிரி காவல்துறையினர் இந்த வழக்கில் சயான் உள்ளிட்ட 10 பேரைத் தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக மாவட்ட நீதிபதி சஞ்ஜய் பாபாவிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோத்தகிரி போலிஸார் சம்மன் வழங்கினர். அதனை பெற்று கொண்ட சயான், ஆக்ஸ்ட் 16 மாலை 3.20 மணிக்கு உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், குன்னூர் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி முடித்தனர்.

விசாரணையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரும் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினருமான கனகராஜ் தன்னிடம் கூறியபடி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூடலூர் பகுதியைச் சேர்ந்த மர வியாபாரியும் அதிமுக வர்த்தக அணி அமைப்பாளருமான சஜீவன் உத்தரவின்பேரில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக சாயன் வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராகப் பணியாற்றிய கனகராஜ் கோடநாடு பங்களாவில் உள்ள முக்கிய ஆவணங்களை எடுத்து வருமாறு சயானிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 3.24 துவங்கிய விசாரணை 6.35 மணி அளிவில் நிறைவடைந்தது.

இவ்விசாரணைதான் இன்று சட்டமன்ற வளாகத்தில் எதிரொலித்தது.

அதிமுகவினர் சட்டப்பேரவைக்கு கறுப்புப்பட்டை அணிந்து வந்திருந்தனர். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் மு.அப்பாவு அனுமதி அளித்ததும், “கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மறு விசாரணை செய்வது எதற்கு?” என, எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

அதற்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்கையில், “இந்த விவகாரம் விசாரணையில் இருக்கிறது. ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல அதிமுகவினர் செயல்படுகின்றனர். இந்த வழக்கில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொண்டு வரப்படும். நீதிமன்ற அனுமதியுடன் தான் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது” என பேசினார்.

இதையடுத்து, அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், பொய் வழக்குப் போடும் திமுக அரசைக் கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் வெளிநடப்பு செய்த அதிமுகவினர், கலைவாணர் அரங்குக்க்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சிக்கல் இன்று பெரிதாகியிருக்கிறது. ஆனால்,

1. ‘கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை, விலகாத மர்மங்கள் வெளிச்சத்துக்கு வராத உண்மைகள். விரைவில்’
2. ’கொடநாடு எஸ்டேட்டில் காவலர் கொலை செய்யப்பட்டு, கொள்ளை முயற்சி, கார் டிரைவர் விபத்தில் மரணம் என அவிழ்க்கப்படாத முடிச்சுகள். ஆதாரங்களுடன் அனைத்துக்கும் அதிர வைக்கும் விடைகள். Game Over Bro’

இந்த இரண்டு ட்விட்டுகளை சுமார் ஒருமாதம் முன்பாக அதாவது ஜூலை 20 ஆம் தேதி போட்டவர் அதிமுக-வின் முன்னாள் ஐடி விங் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன்.

அவர் சொல்லியிருப்பது போல சசிகலாவின் சிறைவாசத்தால் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கிடைத்த வெளிச்சம் முடிவுக்கு வரப்போகிறதா? என்பது போகப்போகத் தெரியும்.

Leave a Response