ஸ்டேன் சாமி மரணத்துக்கு இந்திய அரசே பொறுப்பு – குற்றவாளிகள் தண்டிக்கப்பட பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்……:

மலை வாழ் மக்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துத் தொண்டாற்றிய கிறித்துவத் துறவியான ஸ்டேன் சுவாமி தேசியப் புலனாய்வு முகமையின் காவலில் இருந்தபோது இறந்திருக்கும் செய்தி மக்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் பிறந்த அவர், கிறித்துவ துறவியான பிறகு ஜாா்கண்ட் மாநிலத்திற்குச் சென்று மலைவாழ் மக்களுக்காகத் தனது வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு தொண்டாற்றினார். ஜார்கண்ட மாநிலத்தில் இருந்த கனிம வளங்களைச் சூறையாடுவதற்குப் பெரும் தொழில் நிறுவனங்கள் அரசின் உதவியுடன் திட்டமிட்டன. இந்த அநீதிக்கு எதிராக மலைவாழ் மக்களை அணி திரட்டிப் போராடியதைப் பெரும் குற்றமாக அரசு கருதியது.

அவர் வாழ்ந்த இடத்திலிருந்து வெகுதூரத்தில் அமைந்திருந்த மராட்டியத்தில் நடைபெற்ற கலவர வழக்கு ஒன்று அவர் தூண்டுகோலால் நடைபெற்றதாகப் பொய்க் குற்றம் சுமத்தி இந்திய அரசின் தேசியப் புலனாய்வு முகமை கைது செய்து சிறையிலடைத்தது.

கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக சிறையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானார். 84 வயதான அவருக்குப் பல்வேறு உடல்நோய்கள் இருந்தபோதிலும், தக்க மருத்துவ உதவி அளிக்காமல் தாமதப்படுத்தி, கடைசி நேரத்தில் மருத்துமனையில் சேர்த்து, அதன் காரணமாக நேர்ந்த அவரின் சாவுக்கு இந்திய அரசே பொறுப்பாகும். காவல் நிலையப் படுகொலைக்கும், துறவி ஸ்டேன் சுவாமி சாவுக்கும் வேறுபாடு இல்லை. அவருக்குப் பிணை வழங்குவதில் நீதிமன்றங்களும் தாமதித்துவிட்டன.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரின் விடுதலைக்காக இந்திய தலைமையமைச்சருக்குக் கடிதம் எழுதினார்கள். ஐ.நா.வின் மனித உரிமைக்கான சிறப்புக் காவலர் மேரி லாலோர் என்பவரும் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.

இந்தியாவிலும் ஜார்கண்ட் மாநில முதலமைச்சரும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரை விடுவிக்கும்படி விடுத்த வேண்டுகோளை அரசு ஏற்க மறுத்துவிட்டது.

கிறித்துவத் துறவியான ஸ்டேன் சுவாமி மரணம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படவேண்டும். அவரின் சாவுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தேசத் துரோகக் குற்றங்களைச் சுமத்தி மனித உரிமை ஆர்வலர்கள் பலர் இன்னமும் சிறையில் வாடுகிறார்கள். கிறித்துவத் துறவி ஸ்டேன் சுவாமிக்கு நேர்ந்த கதி அவர்களுக்கும் நேரிட்டுவிடக்கூடாது. எனவே, அத்தகையவர்கள் அனைவரையும் சிறையிலிருந்து விடுவிக்குமாறு வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response