தமிழர் பண்பாட்டு அடையாளம் ‘பனை’ அதைக் காப்பது நம் கடமை – பழ.நெடுமாறன் கட்டுரை

தமிழர் பண்பாட்டு அடையாளம் ‘பனை’ அதைக் காப்பது நம் கடமை என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரை…..

தமிழ் எழுத்துகள் தோன்றிய காலத்திலேயே அவற்றை எழுதுவதற்குப் பனை ஓலைகள் பயன்படுத்தப்பட்டன. தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய இலக்கியங்கள், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், திருமுறைகள், திவ்யபிரபந்தம், பெரியபுராணம், கம்பராமாயணம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுவரை எழுந்த இலக்கியங்கள் அனைத்தும் பனை ஓலையிலேயே எழுதப்பட்டன. ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்த பிறகே காகிதத்தில் எழுதும் பழக்கம் ஏற்பட்டது.

உலகின் சிறந்த செம்மொழியாக தமிழ் மொழி போற்றப்படுவதற்கு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற பழமையான இலக்கியங்களே காரணமாகும். நமது முன்னோர் இவற்றை பனை ஓலையில் எழுதி நமக்கு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொல்காப்பியத்தில் பனை மரத்தைக் குறிக்க பெண்ணை, போந்து, போந்தை ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

திருக்குறளில்,
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

என திருவள்ளுவர் கூறியுள்ளார். மற்றும் சங்க இலக்கியங்களிலும் பனை மரத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

பனை மரத்தை பஞ்சம் போக்கி, கற்பகத்தரு என்றெல்லாம் நம்மவர்கள் காலம் காலமாக வாழ்த்தி வருகிறார்கள். பனையும், எள்ளுமே நம் தமிழகத்தின் தொன்மையான காட்டுப்பயிர்கள். எனவேதான் அன்று பனைக்கருப்பட்டியுடன் எள் சேர்த்து ஆட்டியெடுத்த எண்ணெய் நல்ல எண்ணெய் என்ற பெயரில் உணவாக, உடல் காக்கும் மருந்தாக பயன்பட்டது. பனை ஒரு மரமல்ல. அது நம்மவர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட பண்பாட்டு அடையாளமாகும்.

இந்தியாவில் 10 கோடி பனைமரங்கள் இருந்தன. தமிழகத்தில் இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், அரியலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த பழமையான மரங்கள் அதிகமிருந்தன. தமிழகத்தில் மட்டுமே 5 கோடி பனை மரங்கள் இருந்தன எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் அரசு மரம் இந்த பனை மரம் என்பதும் சிறப்பாகும். இந்த பனை மரங்களையும், இது சார்ந்த தொழிலையும் நம்பியே தமிழகம் முழுவதும் 50 இலட்சத்திற்கும் அதிக பனைத் தொழிலாளர்களும் இருந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை, வேம்பார் உள்பட தென் மாவட்டத்தின் 300 கிராமங்களில் பனைப் பொருள் உற்பத்தி மிளிர்ந்தது. நம் தென்னக நாட்டுப்புற திருமணங்களில் சோறு பதப்படுத்தவும், பந்தி நடத்தவும் பனை ஓலைப்பாய்களே பயன் தந்தன. பல கிராமங்களில் சோறு பரிமாற பனை ஓலைப் பெட்டிகளைப் பார்க்கலாம். திருமணங்களில் பட்டுச்சேலை, பழம் என மங்கலப் பொருட்களை வண்ண நார்ப் பெட்டிகளில் வைத்து எடுத்து வரும் மரபு இருந்தது. சீர் பொருட்களிலும் நார்ப்பெட்டி, விசிறி, வெற்றிலைக் கொட்டான் என பனை தயாரிப்புகள் முக்கிய இடம் பிடித்தன. மண மக்களுக்கு உறவினர்கள் விருந்தளித்து தேங்காய், பூ, பழம், புதிய துணிகளை இந்த பெட்டியில் வைத்தே அனுப்பினர். நம்மூர் சந்தைக்குப் பொருள் வாங்கச் செல்வோரோ, பொருள் விற்பவரோ இப்பெட்டிகளை மறந்ததில்லை.

விருதுநகர், சாத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மிட்டாய்ப் பெட்டிகள் என இனிப்பு, காரம் உள்ளிட்ட பண்டங்கள் கடைகளில் இந்த ஓலைப்பெட்டிகளில் தான் விற்கப்பட்டன. கோயில்களில் பூசைக்குப் பூப் பறிக்க, அர்ச்சனை பொருட்கள் விற்க பனை ஓலைத் தட்டுக் கொட்டான்களே இருந்தன. நம் தென் மாவட்ட பூ வணிகர்கள் மலர்களை மாலையாய், சரமாய் கோர்க்கும் வரை வாடாது பாதுகாக்க இந்த ஓலைப்பெட்டிகளே உதவின.

நம் கிராமத்துக் கிணறுகளில் தண்ணீர் முகந்த தோண்டிப்பட்டை ஓலையினால் செய்யப் பட்டிருந்தது. கோடை காலத்திலும், மின்தடை நேரத்திலும் சுயமாக காற்று பெற பனை ஓலை விசிறிகளே பயனளித்தன. வீடு, முற்றத்தை சுத்தம் செய்யும் துடப்பங்களாகவும் பனை ஓலை ஈக்கிகள் பயனாகின. வீட்டைச் சுற்றியோ, தோட்டங்களிலோ நெரிசல் எனப்படும் வேலியையும் இப்பனை ஓலைகளே தந்தன.

மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் இன்றும் முறத்தை சொளகு என்கின்றனர். தானியங்கள் புடைக்க, தூசு அகற்ற, நெற்களத்தில் தூற்ற என சொளகின் பயன்பாடு அதிகம். படுக்கையாக மட்டுமல்லாது பொருட்களை காயவைக்க, கருவாடு உள்பட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதிக்கு என பல பயன்பாடுகளுக்கும் ஓலைப்பாய்களே உதவின. தென்மாவட்ட முசுலிம் கிராமங்களில் துணி போர்த்தி, ஓலைப்பாயில் சுற்றிவைத்தே அடக்கத்திற்கான உடல்கொண்டு வரப்படுகிறது. அடக்கத்தின்போது மண்ணறை மீது அடுக்கி வைக்க பனை மரச் சட்டங்களே பயனாகின்றன.

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாப்பதில் பனை முக்கியப் பங்காற்றி வருகிறது. ஒரு பனை மரத்தின் ஆயுள் காலம் 100 ஆண்டுகளுக்கு மேலானதாகும். பல நூற்றாண்டுக் காலமாக நமது முன்னோர்கள் நட்டு வளர்த்துப் பயன்படுத்திய பனை மரங்களை விறகுக்காக வெட்டுவதும், அதன் விளைவாக நிலத்தடி நீர் மட்டம் வற்றுவதும் பொறுத்துக்கொள்ள முடியாததாகும். இயற்கை தந்த வளத்தை அழிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்களின் பகைவர்களே.

பிறந்த பொழுதில் தூளி துவங்கி, வாழ்வு முடிந்து தூக்கிச் செல்லும் வரை இந்த பனை நம்முடனேயே நடந்து வந்தது. நம் ஆயுள் கடந்தும் அடுத்த தலைமுறைக்கும் உதவுகிற அளப்பரிய பனை மரம் கால ஓட்டத்தில் காக்கப்படாமலேயே விடப்பட்டிருக்கிறது. இம்மரமும், மரம் சார்ந்து வாழ்ந்த மக்களும், மரத்தில் கிடைத்த பயன்களும் தூக்கி எறியப்பட்டு வரும் செயல் இம்மண்ணின் ஒவ்வொரு மனிதரும் வெட்கித் தலைகுனிகிற செயலாகவே இருக்கிறது.

ஒரு காலத்தில் வீடுகள் கட்டுமானத்திற்கென ஓடுகள் கவிழ்த்துவதற்கென பனைச் சட்டங்களுக்காக பெருமளவு பனைமரங்கள் வெட்டிச் சாய்த்து அழிக்கப்பட்டன. இப்போதோ இந்த அற்புதமான பழமை மரங்களைக் காப்பதிலும், வளர்ப்பதிலும் அரசு அக்கறை காட்டாதது, இந்த நம் மூதாதை மரத்தை அழிவிற்கு இழுத்துச் சென்று மரண முனகலுக்கு ஆளாக்கி இருக்கிறது. இந்த மரம் காக்கப்பட வேண்டும். இதற்கான இயக்கங்கள் ஒவ்வொரு மனிதரிடமும் முளைக்கவேண்டும் என்பது, ஆதிமரமான பனையை நேசிப்பவர்களின் குரலாகும்.

இடம் பெயர என்ன காரணம்?

பனைத் தொழிலாளர்கள் நலன் காக்க தமிழகத்தில் மாநில பனைத் தொழிலாளர் சங்கம் செயல்படுகிறது. இச்சங்கத்தில் பனைத் தொழிலாளர்கள் உறுப்பினர்கள் ஆக்கப்படுகின்றனர். ஆனால் இச்சங்க உறுப்பினர்களாக வெறும் 12 ஆயிரத்திற்கும் குறைந்தவர்களே இருக்கின்றனர். இதன் மூலமே இலட்சக்கணக்கான பனைத் தொழிலாளர்கள் இருந்த இம்மண்ணில், இவர்கள் எண்ணிக்கை கரைந்திருப்பதை அறிய முடிகிறது. பதநீர் இறக்கி கருப்புக்கட்டி (கருப்பட்டி) தயாரிக்கும் தொழிலாளர்களை கள் இறக்கியதாக போலீசார் பொய் வழக்கு போடுவதும் நடக்கிறது. இதனாலும் பனைத் தொழிலை ஓரம் கட்டிவிட்டு, பிற தொழில்களுக்கு இவர்கள் இடம்பெயர்ந்திருக்கும் வரலாறும் அறியப்படுகிறது.

பெருகும் குழந்தைத் தொழிலாளர்கள்

பனைத் தொழிலாளர்களில் பலரும் வேலை தேடி ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும், புதுச்சேரி பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த மாநிலங்களில் கள் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இடம் பெயர்வதும், பெரும்பாலும் ஊர் பகுதிகளை விட்டு காட்டிற்குள் பனைமரத் தொழில் செய்வதால் இவர்களின் குழந்தைகள் கல்வியைப் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.

இவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவரும் நிலை உள்ளது. இத்தொழிலை காக்க முதலில் தமிழகத்தில் பனைமரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவேண்டும்.

கள் இறக்க அனுமதிக்க வேண்டும். பனைத் தொழிலாளர்களுக்கு தொழில் ரீதியான கடன்கள் (விவசாயிகளுக்கு விவசாயக் கடன், பால் உற்பத்தியாளர்களுக்குக் கடன், நெசவாளர்களுக்குக் கடன் போன்று) வழங்கி ஊக்குவிக்கவேண்டும். அவர்களின் குழந்தைகள் கல்வி கற்க, தொழில் செய்யும் இடங்களிலிருந்து போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

பனை மரக் காடெங்கே?

தமிழகத்தில் அதிகமாக இராமநாதபுரம் மாவட்டத்தில்தான் 2 கோடி பனை மரங்கள் இருந்தன. மாவட்டத்தில் சில ஆண்டுகளில் மட்டும் 50 இலட்சத்திற்கும் அதிக பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன. மேலும் பனங்காடுகள் அழிக்கப்பட்டு, வீட்டு மனைகளாகவும் மாற்றப் பட்டுள்ளன.

இதனால் மாவட்டத்தில் தற்போது பனை மரங்கள் எண்ணிக்கை பாதிக்கும் கீழாகச் சரிந்திருக்கிறது. ஆனாலும் வேறு வழிதெரியாத, இம்மரத் தொழிலை மட்டுமே நம்பிய 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. கள் இறக்கியதாக வழக்குப்போடும் அரசு ஒருபுறம், பனைமரங்கள் வெட்டப்படுவதால் வாழ்வாதாரம் பாதிப்பு மறுபுறம் என இம்மக்களின் அவதி வாழ்க்கையின் வலி அதிகம்.

எவ்வளவு பெரிய கடும் புயல் வீசினாலும் பனை மரங்கள் ஒருபோதும் சாய்வதில்லை. கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும். ஆனால், நமது வாழ்க்கைக்கு முழுமையாகப் பயன்படும் பனை மரங்களை செங்கல் சூளைகளுக்காக வெட்டி அழிக்கும் வேலையை சிலர் செய்கின்றனர். இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை நமது மக்களுக்குக் குறிப்பாக இளைஞர்களுக்கு உண்டு.

திருவாரூர் மாவட்டத்தில் பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் இளைஞர்கள் திரு. பருத்திச்சேரி ராசா தலைமையில் பனை மரங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும். பனை மரங்களைப் பாதுகாக்க உரிய சட்டங்களை இயற்றுவதற்குத் தமிழக அரசு முன்வரவேண்டுமென இந்த இயக்கத்தினர் வைத்துள்ள கோரிக்கை தமிழக மக்களின் கோரிக்கையாகும்.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response