அதிமுகவிலிருந்து ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 5 பேர் அதிரடியாகக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும், முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில், நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, கழக வர்த்தக அணிச்செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், ஈரோடு புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கந்தசாமி, ஈரோடு புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச்செயலாளர் ரமேஷ், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் வரதராஜ், கோபிசெட்டிபாளையம் நகரக் கழகச் செயலாளர் காளியப்பன் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது
என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் சசிகலாவோடு தொலைபேசியில் உரையாடியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், இவர்கள் அனைவரும் திமுகவில் இணையவிருப்பதாகவும் அந்தத் தகவல் அறிந்தே இவர்களை அதிமுவிலிருந்து நீக்கியதாகவும் சொல்கிறார்கள்.இவர்களோடு, இரண்டு ஒன்றியச் செயலாளர்கள், நான்கு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், பத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கத் தலைவர்கள், நகரச் செயலாளர்கள் என மொத்தம் 19 முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைவதாகத் தகவல்.
இரண்டில் எது சரி? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.