கொரோனா தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிப்பதா?
மத்திய அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.
இது தொடர்பாக அக்கட்சியின் தமிழக செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில்…..
இந்தியாவில் இதுவரை எல்லாவிதமான தடுப்பூசி திட்டங்களும், அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது என்பதே வரலாறு.
ஆனால் தற்போது கொரானாவைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிக்குக் கட்டணம் செலுத்தித் தான் பயனாளிகள் செலுத்திக் கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, இந்திய மக்களின் உயிரோடு விளையாடுகிற கொடுமையான காரியம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
45 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்தவமனைகளில் குறைந்த விலையிலும் கொரோனா தடுப்புசி செலுத்தி வரப்பட்டது.
மத்திய அரசு 18 வயது முதல் 44 வயதுள்ளவர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருக்கின்ற காரணத்தைச் சொல்லி 18 வயது முதல் 44 வயதுள்ளவர்கள் தடுப்பூசி போடுவதற்கு இணைய தளத்தில் கட்டயாம் பதிவு செய்து கொள்ள வேண்டுமெனவும், அவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு வரிசை அடிப்படையில் மே 1ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், அதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை அவர்கள் கண்டிப்பாக செலுத்த வேண்டுமெனவும் அறிவிப்பு செய்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறையினுடைய செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். இது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
18 வயது முதல் 44 வயதுள்ள ஒவ்வொருவரும் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு ரூ. 1200/- வரை வசூலிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை பற்றாக்குறையின் காரணமாக இதன் விலை மேலும் அதிகரிக்கவும் செய்யலாம். எனவே, இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமானால் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ரூ. 2,400/. வரை கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
தற்போது வரை தடுப்பூசி உற்பத்தியை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்படைத்துள்ள காரணத்தால் தனியார் நிறுவனங்களிடமிருந்து தான் தடுப்பூசி பெற வேண்டிய நிலை உள்ளது. 18 வயது முதல் 44 வயதுள்ளவர்களின் மொத்த மக்கள் தொகை 59 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடுவதானால் ஏறக்குறைய 120 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படும். இதன் மூலம் இரண்டு தனியார் நிறுவனங்கள் ரூ. 1.25 இலட்சம் கோடி ரூபாய் இந்திய நாட்டு மக்களை கொள்ளையடிப்பதற்கு மத்திய அரசு கதவு திறந்துவிட்டுள்ளது.
ஏற்கனவே தடுப்பூசி போடுவதற்கு மக்கள் தயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கட்டணம் கட்டி தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் ஐந்து நபர்களை கொண்ட ஒவ்வொரு குடும்பமும் ரூ. 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் செலவழித்து தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து விடும் நிலையே ஏற்படும். இதனால் கொரோனா தொற்று 3 வது அலை, 4 வது அலையில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுவதோடு, பெரும் உயிரிழப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
எனவே அரசாங்கம் தேவையான தடுப்பூசி உற்பத்தியை தனியார் துறையில் மட்டுமல்லாமல் பொதுத் துறையிலும் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தை திரும்பப் பெற்று, அனைவருக்கும் தனியார் மற்றும் பொது மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இலவசமாக செலுத்துகிற திட்டத்தை மத்திய அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும். இப்பணியை மாநில அரசுகளின் தலையில் சுமத்திவிட்டு மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
ஏற்கனவே மக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொள்வது சம்பந்தமாக அச்சங்களும், சந்தேகங்களும் இருந்து வரக்கூடிய சூழ்நிலையில், அனைவருக்கும் இலவசமான கட்டாயமான தடுப்பூசி என்ற முறையில் செலுத்துவது வருகிற காலத்தில் கொரோனா தொற்றை, மூன்றாவது, நான்காவது அலை என்று அது மீண்டும் மீண்டும் வருவதிலிருந்து தடுப்பதற்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும் பேருதவி செய்யும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.