அதிமுகவை மீட்க சசிகலா வழக்கு – நேற்று நடந்தது என்ன?

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன் பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறை சென்றார். அதையடுத்து நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில், அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை நீக்கி, அவர்களை நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுத்தது செல்லாது என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்தப் பொதுக்குழுவையும், அதில் இயற்றப்பட்ட 12 தீர்மானங்களையும் செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர்.

அதன் பின்னர், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு பட்டியலிடப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது.
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அதன்பின், அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரிய சசிகலா தொடர்ந்த வழக்கை உடனே விசாரிக்க சிவில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அ.ம.மு.க. என்ற கட்சியைத் தொடங்கி நடத்திவருவதால் அவ்வழக்கில் இருந்து தான் விலகிக்கொள்வதாக டி.டி.வி.தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி ரவி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அ.தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரவி, மனுவுக்கு பதில் அளிக்க சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 23 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Leave a Response