திமுக வெல்லும் மோடி ஆட்சி வீழும் – டி.ராஜா பேட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியப் பொதுச்செயலாளர் டி.ராஜா, சென்னை தியாகராயநகரில் நேற்று பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது…..

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறப் போகிறது. மக்கள் எழுச்சி அதைப் பறைசாற்றுகிறது. எனவே இதுவே மக்களின் தீர்ப்பாக இருக்கப்போகிறது. அதேபோல புதுச்சேரியிலும் காங்கிரசு-தி.மு.க. கூட்டணி அரசு மகத்தான வெற்றி பெறும். அ.தி.மு.க.-பாஜக கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கப் போகிறது. இந்தத் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மத்தியில் மோடி ஆட்சிக்கு எச்சரிக்கை மட்டுமல்ல, அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்கும் தொடக்கமாக இருக்கப்போகிறது.

தமிழகம், புதுச்சேரியில் தேர்தலுக்காக அதிகார துஷ்பிரயோகமும், பணம் விநியோகமும் அதிக அளவில் உள்ளதாகத் தகவல் வருகிறது. எனவே, தேர்தல் ஆணையம் சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும். ஏற்கனவே வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்வதில் குழப்பம், அவற்றை வாக்குப்பதிவின் போது பயன்படுத்துவதில் குளறுபடிகள் போன்ற பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மனதில் எழுந்துள்ளன. இவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் கணக்கில்கொண்டு தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்.

தமிழகத்தில் இந்தத் தடவை நடைபெற உள்ள தேர்தல் நாடே எதிர்நோக்கும் சரித்திர தேர்தலாக இருக்கப்போகிறது. ஆட்சி மாற்றமே மக்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response