அஸ்வின் அக்சர் அதிரடி – 3 ஆம் நாளில் முழுவெற்றியைச் சுவைத்த இந்தியா

இந்தியா – இங்கிலாந்து மட்டைப்பந்து அணிகள் இடையிலான 4 ஆவது மற்றும் கடைசி ஐந்துநாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அக்‌ஷர் படேல் 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

2 ஆம் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 60, அக்‌ஷர் படேல் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 89 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 3 ஆம் நாளான இன்று வாஷிங்டன் சுந்தரும், அக்‌ஷர் படேலும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். இந்த இருவர் கூட்டணியைப் பிரிக்க இங்கிலாந்து அணி மிகவும் தடுமாறியது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் – அக்‌ஷர் கூட்டணி 171 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தியது. எனினும் அக்‌ஷர் படேல் தேவையில்லாமல் ரன் எடுக்க ஓடியதால் 43 ரன்களில் ரன் அவுட் ஆனார் அப்போது 96 ரன்களில் இருந்தார் வாஷிங்டன் சுந்தர். அவர் எப்படியும் சதமடித்து விடுவார் என நம்பினார்கள் இந்திய ரசிகர்கள். ஆனால் அடுத்த ஓவரில் இஷாந்த் சர்மா, சிராஜ் ஆகிய இருவரையும் டக் அவுட் செய்தார் பென் ஸ்டோக்ஸ். இதனால் மறுமுனையில் இருந்த வாஷிங்டன் சுந்தர், ஏமாற்றத்தோடு 96 ரன்களுடன் வெளியேறினார்.

இதன்மூலம் இந்திய அணி, 114.4 ஓவர்களில் 365 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்சில் இந்திய அணி 160 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும், லீச் 2 விக்கெட்டுகளும் எடுத்த்னர்.

இதனையடுத்து 2 ஆவது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி, துவக்கத்திலேயா இந்திய அணியின் சுழல் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அஸ்வின் தனது முதல் ஓவரிலேயே கிராவ்லியை 5 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து அடுத்த பந்தில் ஜானி பேர்ஸ்டோவை வெளியேற்றினார். இதனையடுத்து அஸ்வின், அக்சர் சுழலில் சிக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (30 ரன்கள்) மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தார். பின்னர் 3 ஆம் நாள் தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 33 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்களான பென் போக்ஸ் 13 ரன்களும், அடுத்து களமிறங்கிய டொம்னிக் பெஸ் 2 ரன்னும், ஜேக் லீச் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனிடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லாரன்ஸ், தனது அரை சதத்தைப் பதிவு செய்திருந்த நிலையில் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

முடிவில் இங்கிலாந்து அணி 54.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக சிறப்பாக பந்து வீசிய அக்சர் படேல் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசம் மற்றும் ஒரு இன்னிங்கிஸ் வெற்றியைச் சுவைத்தது.

இங்கிலாந்து அணிக்கெதிரான 3-1 என்ற இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, இலண்டனில் ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

Leave a Response