டிசம்பர் 31 இல் ரஜினி கட்சி அறிவிப்பு இல்லை – மருத்துவ அறிக்கையில் அம்பலம்

டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி அறிவிப்பை வெளியிட இருப்பதால், ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடிப்பதில் தீவிரம் காட்டினார் ரஜினிகாந்த். கடும் கட்டுப்பாடுகளுடன் ஐதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

வழக்கமான கொரோனா பரிசோதனையின்போது படக்குழுவைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் இரத்து செய்யப்பட்டது. ரஜினிக்கு கொரோனா பாதிப்பு என்றாலும், ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

ஆனால், திடீரென்று இரத்த அழுத்த மாற்றத்தால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் பரபரப்பு உண்டானது.

ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தாலும், பல்வேறு பரிசோதனைகள் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது தெரியாமல் இருந்தது.

இன்று (டிசம்பர் 27) காலையில், “அனைத்துப் பரிசோதனை முடிவுகளும் வந்துவிட்டன. அச்சப்படும்படியாக எதுவும் இல்லை. மதியம் ரஜினி வீடு திரும்புவது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில், ரஜினி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

“உயர் ரத்த அழுத்தம், உடல் சோர்வு காரணமாக ரஜினிகாந்த் 25 டிசம்பர் 2020 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் குழு அவரைத் தீவிரமாகக் கண்காணித்து சிகிச்சை அளித்தது. தற்போது அவரது ரத்த அழுத்தம் சீரான நிலையில் உள்ளது. அவர் நன்றாகத் தேறியுள்ளார். அவரது உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருந்ததால் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் அவரது வயதை மனதில் வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளைத் தாண்டி பின்வரும் அறிவுறுத்தல்கள் அவருக்குத் தரப்பட்டுள்ளன.

1 வாரத்துக்கு முழு ஓய்வு. அடிக்கடி இரத்த அழுத்த அளவு பார்க்கப்பட வேண்டும். குறைந்தபட்ச உடல் ரீதியிலான வேலை. மன அழுத்தம் கூடாது. இவற்றோடு சேர்த்து கோவிட்-19 தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்கும் வேலைகளில் அவர் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்”.

இவ்வாறு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையிலிருந்து ஐதராபாத் வீட்டுக்குத் திரும்பும் ரஜினிகாந்த், எப்போது சென்னை திரும்புவார் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும்.

ஒரு வாரத்துக்கு முழு ஓய்வு தேவை என்று மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளதால் டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்பில்லை என்கிறார்கள்.

Leave a Response