தில்லி உழவர்கள் போர் தொடரும் – போராட்டக்குழுவின் புதிய அறிக்கை

அண்மையில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச்சட்டம் – 2020, விவசாய விளைபொருள்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்- 2020, விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் – 2020 ஆகியன அந்த மூன்று சட்டங்கள்.

இந்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று நாடு முழுவதிலும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகள் தொடர்ந்து பேராடிவருகின்றன. இந்த நிலையில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் நாடு முழுவதும் விவசாயிகள் சங்கங்கள் ஒன்று சேர்ந்தன. இந்த அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் செப்டம்பர் 25 ஆம் தேதி மறியல் போராட்டமும் சட்ட நகல் எரிப்புப் போராட்டமும் நடைபெற்றது.

விவசாயிகளின் நலன்களை நோக்கமாகக் கொண்டே இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாக மத்திய அரசு கூறிவருகிறது. விளைபொருள்களை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும் விவசாயிகளுக்கு முழு சுதந்திரத்தை இந்தச் சட்டம் அளிக்கிறது என்கிறது மத்திய அரசு. ஆனால், இந்தியாவில் ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் வகையில் இந்தச் சட்டங்களை மோடி அரசு கொண்டுவந்துள்ளது என்பது விவசாய அமைப்புகளின் குற்றச்சாட்டு. இந்தச் சட்டத்துக்கு எதிராக பா.ஜ.க கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரே பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது முதலே பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த ஐந்து நாட்களாக ‘டெல்லி சலோ’ போராட்டத்தை விவசாயிகள் நடத்திவருகிறார்கள். பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

மத்திய அரசைக் கண்டித்து நவம்பர் 26 ஆம் தேதி நாடு தழுவிய வரலாறு காணாத வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். நவம்பர் 27 ஆம் தேதி டெல்லியில் மோடி அரசை முற்றுகையிடப் பல இலட்சம் விவசாயிகள் சாரை சாரையாக அணிதிரண்டு களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களை டெல்லிக்குள் நுழையவிடாமல் காவல்துறை மற்றும் துணை ராணுவத்தைப் பயன்படுத்தி தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீரைப் பீய்ச்சி கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது.

அரசே நெடுஞ்சாலைகளில் பள்ளங்களை வெட்டியும், பலகட்டத் தடுப்புகளை உருவாக்கியும் போக்குவரத்தைத் தடைசெய்த போதிலும் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலைகளில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் வாழ்வைப் பாதுகாப்பதற்கு உயிர் காக்கும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

டெல்லி சாலைகளில் 80 கி.மீ. நீளத்திற்கு விவசாயிகள் அமர்ந்து வரலாறு காணாத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வஞ்சகமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் விரோதச் சட்டங்களை இரத்து செய்யும் வரை கலைந்துசெல்ல மாட்டோம் என அறிவித்துள்ளனர். நியாயமான இப்போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பத்திரிக்கைச் செய்தி:

பஞ்சாப் மற்றும் அரியானா உழவர்கள் பெரும் எண்ணிக்கையில் பேரணியைத் தொடரவுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உழவர்களும் டெல்லி செல்கின்றனர்.
அரசு உள்துறை அமைச்சகம் மற்றும் உளவுத்துறை மூலம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதை உழவர் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பதுடன் உயர்நிலை அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையை வலியுறுத்தியுள்ளனர்.

உழவர்கள் பெரும் எண்ணிக்கையில் டெல்லி வருமாறு உழவர் அமைப்புகள் வேண்டுகை விடுத்துள்ளன.
உழவர்களுக்கு ஆதரவான அதேசமயம் பெருவணிக நலன்களுக்கெதிரான அனைத்து சக்திகளும் இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென உழவர் அமைப்புகள் கோருகின்றோம்.

பேரராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதுடன் திசம்பர் 1 முதல் அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஒன்றிய அரசின் உழவர் நலன் மற்றும் மக்கள் நலனுக்கெதிரான மூன்று சட்டங்களையும், திருத்தப்பட்ட மின்சார சட்ட முன்வரைவு 2020 ஐயும் திரும்பப் பெறவேண்டும் என்றும் உழவர் சங்கங்கள் ஒருமித்த குரலில் கோருகின்றன.

அமைதியான முறையில் உறுதிப்பாட்டுடன் டெல்லியை நோக்கி ஆர்ப்பரித்து வரும் உழவர்கள் தங்கள் கோரிக்கைகளை அடைவதில் முழு உறுதியுடன் உள்ளனர்.

பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான உழவர்கள் டெல்லி அருகிலுள்ள சிங்கு மற்றும் திக்ரி எல்லைப் பகுதியில் அணி திரண்டுள்ளனர். உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களிலிருந்தும் உழவர்கள் டெல்லி நோக்கி வர ஆரம்பித்துள்ளனர்.

“டெல்லி செல்வோம்” என்ற போராட்டத்தை அறிவித்த பின் இதுவரை இந்திய அரசு உழவர்களின் கோரிக்கைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

“டெல்லி செல்வோம்” என்ற பெயரில் நாடு முழுவதும் மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதென்று செப்டம்பர் 2020 ல் அறிவித்தது முதல் இன்று வரை அரசு உழவர்களின் கோரிக்கையைக் கண்டு கொள்ளவில்லை.

நாடு முழுவதும் உள்ள உழவர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ளூர் அளவில் பல போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வரும் அதே வேளையில் டெல்லிக்கு அருகிலுள்ள மாநிலங்களின் உழவர்கள் டெல்லி நோக்கி அணி வகுத்துவருகின்றனர்.

டெல்லி வருவதற்காக உழவர்கள் விரிவான முன்னேற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆனால், அவர்கள் மீது நீரைப் பீச்சியடிப்பது, கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசுவது, தடியடி நடத்துவது, சாலைகளில் பள்ளம் தோண்டி உழவர்களை வரவிடாமல் தடுப்பது போன்ற பல்வேறுவிதமான மனிதத்தன்மையற்ற ஈவிரக்கமற்ற அடக்குமுறைகளை அரசு ஏவியுள்ளது. அரசின்மீது உழவர்கள் நம்பிக்கையிழக்கும் நிலைக்கு அரசே காரணமாகும்.

அரசு கொண்டு வந்துள்ள மூன்று கறுப்புச்சட்டங்களையும், மின்சாரச் சட்ட முன்வடிவு 2020 ஆகியவற்றைத் திரும்பப்பெற வேண்டும் என்ற உழவர்களின் முக்கியக் கோரிக்கைகளுக்குப் பதில் கூறுவதை விட்டு விட்டு உழவர்கள் டெல்லியில் எங்கு முகாமிட வேண்டும் என்பதை நோக்கி விவாதத்தை அரசு திசை திருப்பிவிட முயற்சிக்கிறது.

போராட்டம் நடத்தி வரும் உழவர்கள் மத்தியில் மட்டுமின்றி டெல்லி மக்கள் மத்தியிலும்கூட பெரும் அச்ச உணர்வையும் சந்தேகத்தையும் கிளப்பும் வகையில் அரசு காவல் துறையை ஏவியுள்ளது. உழவர்கள் செல்லும் வழியிலுள்ள தடுப்புகள் இன்னும் கூட அகற்றப்படவில்லை.

அரசு உழவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதில் உண்மையாகவே அக்கறை கொண்டிருக்குமானால், “ஒழுங்கமைவோடு புராரி மைதானத்தில் சென்று போராட்டம் நடத்துங்கள், அதற்குப் பின் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிப்பதைத் தவிர்ப்பதுடன், இச்சட்டங்களின் பலன்கள் பற்றி உழவர்களுக்கு விளக்க முயற்சிப்பதையும் நிறுத்திக் கொண்டு அரசு என்ன தீர்வை முன்வைக்கிறது என்ற திட்டத்துடன் நேரடியாக வர வேண்டும். உழவர்கள் தங்களின் கோரிக்கையில் தெளிவாக உள்ளனர். அரசு உழவர்கள் பிரச்சினையை உள்துறை அமைச்சகம், உளவுத்துறை ஆகியவற்றின் மூலம் அணுகுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அகில இந்திய. விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற் குழு கோருகிறது.

அரசு இச்சட்டங்களை பாராளுமன்றத்தில் அதிரடியாக நிறைவேற்றியுள்ளதால், உழவர் கோரிக்கைகள் குறித்து அரசின் அரசியல் ரீதியான பதில் அரசின் மிக உயர்ந்த மட்டத்திலிருந்து வர வேண்டும். உள்துறை அமைச்சகத்தை உழவர் பிரச்னையில் ஈடுபடுத்துவது அரசின் மீது உழவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு மாறாக உழவர்களை மிரட்டுவதாகவே அமையும்.

அகில இந்திய உழவர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற் குழு போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் பொருட்டு உழவர்களை டெல்லியை நோக்கி வருமாறு அழைப்பு விடுக்கிறது.

அத்துடன் அனைத்து பெருவணிக நிறுவன எதிர்ப்பு மற்றும் உழவர் ஆதரவு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த முன் வரவேண்டும் என்றும் கூட்டமைப்பு விரும்புகிறது. அகில இந்திய அளவில் அணி திரட்டுவதுடன் திசம்பர் 1 முதல் அந்தந்த மாநில அளவிலும் உழவர்கள் அணிதிரண்டு போராட வேண்டும் உழவர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

பொதுமக்களுக்கு சில சிரமங்கள் மற்றும் தடங்கல்கள் ஏற்பட்டாலும்கூட, டெல்லி, அரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் உழவர்களுடன் பெருமளவில் ஆர்வத்துடன் இணைந்து போராட வேண்டும் என்றும் கூட்டமைப்பு அழைப்பு விடுக்கிறது.

இந்திய உழவுத்தொழிலையும் இந்திய உழவர்கள் அனைவரையும் காக்கும் பொருட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் மற்றும் அரியானா உழவர்களுக்கு இக்கூட்டமைப்பு மிகுந்த மரியாதையுடன் தலைவணங்குகிறது.

இப்போராட்டத்தின் போது தங்கள் இன்னுயிரை ஈந்த உழவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுப்பதில் பெரும் உந்து சக்தியாக இருப்பர். நம்முடைய போராட்டப் பாதை அமைதி வழியிலான மக்கள் திரள் போராட்டமாகவே தொடரும்.

இவ்வாறு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

Leave a Response