முடிந்தது ஐபிஎல் 13 – ஐந்தாம் முறை வென்ற மும்பை

13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதின.

அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி டெல்லி அணியின் சார்பில் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

துவக்கமே டெல்லி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதலாவதாக களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களமிறக்கிய ரஹானேவும் 2(4) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஷிகர் தவானும் 15(13) ரன்களில் இன்று களமிறக்கப்பட்ட ஜெயந்த் யாதவ் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இதனால் டெல்லி அணியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அடுத்ததாக ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியால் ரன் ரேட் சீராக உயர்ந்தது. இந்த ஜோடியில் சிறப்பாக ஆடிய ரிஷாப் பண்ட் 35 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 56(38) ரன்களில் கேட்ச் ஆனார். மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்து களமிறங்கிய ஹெட்மயர் 5(5) ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 9(9) ரன்களும், ரபாடா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 65(50) ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டுகளும், நாதன் கவுல்டர் நிலே 2 விக்கெட்டுகளும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதனை தொடர்ந்து 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது.

மும்பை அணியின் வீரர்கள் தொடக்க ஆட்டகாரரான குயிண்டன் டி காக் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதையடுத்து நிதானமாக விளையாடிய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியாக மும்பை அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 ஆம் முறையாக கோப்பையையும் வென்றது.

Leave a Response