கனிராவுத்தர் குளத்தின் கரைகளில் பனைக் கன்றுகளை நடவேண்டும்

கனிராவுத்தர்குளம் ஆக்கிரமிப்பு, தூர்வாரும் பணியை நடப்பு ஆண்டிலேயே தொடங்க வேண்டும் என்று குளம் மீட்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த இயக்கம் சார்பில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் நிலவன் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கனிராவுத்தர் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, 14.40 ஹெக்டேர் பரப்புள்ள ஏரியை ரூ.10 கோடியில் சுத்தமாக்கவும், ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொள்ளப்படும் என்ற சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம். இருப்பினும், குளத்தின் பரப்பான 35.58 ஏக்கர் பரப்பை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணிகளை நடப்பாண்டிற்குள்ளேயே தொடங்க வேண்டும்.

அனுமதியற்ற கட்டடங்கள் மீதும், ஆக்கிரமிப்புகள் மீதும் உள்ளூர் திட்டக் குழுமமும், மாநகராட்சியும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தை தூர்வாரி அழகுபடுத்தும் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், தொடர்ந்து குளத்தைப் பாதுகாத்து பராமரிக்கவும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். குளம் தொடர்பான அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

குளத்தின் கரைகள், குளத்திற்கு வரும் நீர்வழி வாய்க்கால் ஓரங்களில் நூற்றுக்கணக்கான பனைக் கன்றுகளை நடவேண்டும். ஏனெனில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கனிராவுத்தர் குளத்தைச் சுற்றிலும் 300 பனை மரங்கள் இருந்தன. பனைமரங்கள் மழைநீரை நிலத்தடியில் வெகு ஆழம் வரை கொண்டு சென்று சேமிக்கும் திறன் கொண்டது. குளத்திற்கு வரும் இரு நீர் வழிப்பாதைகளிலும் சாயம் மற்றும் சாக்கடைக்கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். கனிராவுத்தர் குளத்தில் மீன்வளம் பெருக்கவும், குழந்தைகளுக்கான நீச்சல் குளம் அமைக்க வேண்டும். பறவைகள் வந்து போக குளத்தின் நடுவே மண்திட்டுகளை அமைத்து மரக்கன்று நட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கண.குறிஞ்சி, க.நா.பாலன், டாக்டர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். கலைவேந்தன், ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டச் செயலர் செந்தில்வேல், காந்திய மக்கள் கட்சி பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Response