பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொழிலன் திடீர் கைது

நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாள் விழாவாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதையொட்டி தமிழ்நாடு நாள் கொண்டாடவும் அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டுக் கொடி ஏற்றவும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால் திடீரென அவ்வமைப்பின் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிப்பதாகக் காவல்துறை கூறியது.

அதனால் தன் வீட்டில் கொடியேற்றி வாசலில் கோலம் போட்டு தமிழ்நாடு நாளைக் கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் மீது அரசதுரோகம் உள்ளிட்ட மூன்று சட்டப்பிரிவுகளில் ( 124 (A), 506, 353 ) வழக்கு போடப்ப்ட்டுள்ளது.

திடீரென நேற்று இரவு 9.50 மணி அளவில் வீட்டில் இருந்த அவரைக் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்..

இந்தக் கைது நடவடிக்கைக்குப் தொல்திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தோழர் பொழிலன் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று தமிழ் மண் தன்னுரிமை இயக்கம்.
அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்…

தமிழக மக்கள் முன்னணி தலைவர் தோழர் பொழிலன் மீது அரசதுரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, 3 சட்டப்பிரிவுகளின் கீழ் (124- A, 506, 353) வழக்கு பதிவு செய்யப்பட்டு, தோழர் பொழிலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொழிவழி மாநிலமாகத் தமிழ்நாடு அமைந்த நாளை, “தமிழ்நாடு நாள்” என்று விழாவைக் கொண்டாடிய தோழர் பொழிலன் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

சிறைவாழ்வு தோழர் பொழிலனுக்குப் புதிதல்ல. ஆனால், கைது செய்யப்படும் அளவிற்கு, யாருடைய தேசத்திற்கு, என்ன தேச துரோகம் செய்தார்? கர்நாடகம் மாநிலம் மாநிலக் கொடி ஏற்றி மொழிவழி மாநில உருவாக்க நாளைக் கொண்டாடும்போது, தமிழர்கள் மட்டும் கொடியேற்றிக் கொண்டாடக் கூடாதா?

தோழர் பொழிலன் மீது போடப்பட்டுள்ள வழக்கு திரும்பப் பெறப்பட வேண்டும். அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் வலியுறுத்துகிறது. தோழர் பொழிலன் கைது செய்யப்பட்டதை தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response