அநீதிக்கு மேல் அநீதி – மத்திய அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை……

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இவ்வாண்டு முதலே செயற்படுத்த அனுமதிக்கவேண்டும் என தமிழக அரசும், கட்சிகளும் முன் வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்திருப்பது அநீதிக்குத் துணைபோவதாகும் என்பதைச் சுட்டிக்காட்டி கண்டிக்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தமிழ்நாட்டில் உள்ள தனிப்பட்ட அறக்கட்டளைகளும், பிறர் தங்களின் சொந்தச் செலவில் உருவாக்கியுள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்ப்புக் குறித்து முடிவெடுக்கவேண்டிய உரிமை அரசியல் சட்டத்தின்படி தமிழக அரசுக்கு மட்டுமே உண்டு.

ஆனால், இதை மீறும் வகையில் நீட் தேர்வு முறையை தமிழக மாணவர்கள் மீது திணித்தும், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதவீத இடங்களை மத்திய அரசின் தொகுப்பிற்கு என பறித்தெடுத்தது பகற் கொள்ளைக்குச் சமமானதாகும்.

அந்த இடங்களையும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்குவதும், சமூகநீதிக்கு எதிராக இடஒதுக்கீட்டை அளிக்க மத்திய அரசு மறுப்பதும், அதற்கு உச்சநீதிமன்றம் துணைபோவதும் அநீதிக்குமேல் இழைக்கப்படும் அநீதியாகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response