தமிழினப்படுகொலைகளை வரவேற்று அப்படுகொலைகளை நிகழ்த்திய இராஜபக்சே குடும்பத்தினருக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரை செய்தது தொடங்கி ஆட்சியதிகாரத்தை வைத்து பல்வேறு தரகுவேலை செய்துவரும் மட்டைப்பந்து வீர்ர் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு உலகத் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடைசி நேரத்தில் முத்தையா முரளிதரன் கேட்டுக் கொண்டதற்கிணங்க 800 படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் விடுத்துள்ள அறிக்கையில்….
மட்டைப் பந்து வீரர் முத்தையா முரளிதரன் நடிகர் விசய் சேதுபதிக்கு விடுத்த வேண்டுகோளில், “என்னுடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதால் உங்களுக்குப் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன; அதனால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்பட வேண்டாம். வேறு நடிகரை வைத்து என் வரலாற்றுப் படத்தை எடுத்து கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்!
இதன் காரணமாகத்தான் விசய் சேதுபதி அப்படத்தில் நடிப்பதிலிருந்து விலகி கொள்வதுப் போன்ற பொருள் தரும் “நன்றி, வணக்கம்” தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் தமிழ்த் திரைத்துறை உலகின் மதிப்பு மிக்க மூத்தவராக விளங்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் பாரதிராசா, திரைத்துறை அமைச்சர் கடம்பூர் ராசு அவர்கள் போன்றோரும் கேட்டுக் கொண்டும் இனத் துரோகி முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிப்பதை கைவிடாத விசய் சேதுபதி முத்தையா முரளிதரனே விசய் சேதுபதி வேண்டாம் என்று சொன்ன பிறகு விலகிக் கொள்வதில் சிறப்பு ஒன்றும் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.