முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.
‘முரளிதரனை மலையக மக்களின்; அடையாளமாகக் கட்டமைக்க முயல்வது.முரளிதரன் மலையகத்தின் அடிப்படைவசதிகளற்ற காம்பறாக்கள் எனப்படும் குச்சு விட்டில் வாழ்ந்து,உடுத்த நல்ல உடையும், வயிறாற உண்ண நல்ல உணவும் இல்லாமல் தோட்டப்பாடசாலையில் படித்து முன்னேறி உயர்ந்த நிலைக்கு வந்தவர் என்ற ரீதியில் கதை சொல்வது. முரளிதரனுக்கு எதிரான எதிர்ப்பலையை யாழ் சைவ வெள்ளாளிய மனநிலையுடன் முடிச்சுப் போடுவது. நிறுவனமயப்படுத்தப்பட்ட பௌத்த சிங்கள தேசிய வாதத்துக்குச் சிறீலங்கா தேசியம் என்ற போர்வையைப் போர்த்தி வெள்ளையடிக்க முயலும் முரளீதரனுடைய பிழைப்பு வாதத்தை நியாயப்படுத்துவது.’
இப்படி இந்த பிரச்சனையின் பாற்பட்ட பல விடயங்களை கூறிக்கொண்டே செல்லலாம். முதலில் முத்தையா முரளிதரன்; இழப்பதற்கு உயிரைத்தவிர வேறு எதுவும் இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழைத் தோட்டத் தொழிலாளர் குடும்பப் பின்னணியைக் கொண்டவரல்ல.
அவர் இலங்கையிலுள்ள குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அரசியல் செல்வாக்குள்ள ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்.தோட்ட லயன்களும் தோட்டப்பாடசாலையும் அவருக்கு பரீட்சயமில்லாதவை. அவர் படித்ததெல்லாம் கண்டியிலுள்ள பிரபல பாடசாலையில். இந்தப் பின்னணிதான் அவர் சிறீலங்கா துடுப்பாட்ட அணியில் இடம்பிடிப்பதற்கு உதவியாக இருந்தன.
ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனாகவோ அல்லது வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பைபைச் சேர்ந்த ஒரு சராசரித்தமிழ் குடும்பத்தில் பிறந்திருந்தால் நிச்சயமாக அவரால் அந்த இடத்திற்குச் சென்றிருக்க முடியாது. அதேபோல பௌத்த சிங்கள பேரினவாதம் கோலோச்சும் சிறீலங்கா விளையாட்டுத்துறையில் ஒரு தமிழன் என்ற வகையில் அவர் தன்னுடைய இருப்பைத் தக்க வைப்பதற்கு தன்னுடைய அடையாளத்தை இழந்து ஒத்தோடி அரசியல் செய்தே ஆகவேண்டும்.
முரளிதரன் இதைத்தான் செய்தார். இது தான் உண்மை. மாறாக அவர் தன்னுடைய அடையாளத்தை முன்னிறுத்தி மலையக மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தால், அவர்களின் அவல வாழ்வு பற்றி பொது வெளியில் பேசி இருந்தால் எப்போதே அவரை சிறீலங்கா துடுப்பாட்ட அணியிலிருந்து தூக்கி வெளியில் வீசியிருப்பார்கள்.
இந்தவிடயத்தில் முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும். குட்டி முதலாளித்துவ அதிகார வர்க்கம் என்பது தன்னுடைய நலனிலேயே எப்போதும் குறியாக இருக்கும். பொதுநலன் மக்கள் நலன் என்பதெல்லாம் அதற்கு வேண்டப்படாத அல்லது தங்களது நலனுக்குத் தேவைப்படும் போது ஊறுகாய் போலத் தொட்டுக்கொள்ளத் தக்க விடயங்களாகும்.
முத்தையா முரளிதரனைப் பொறுத்த வரை ஒடுக்கப்படும் மக்களின் நண்பனாக இருப்பதை விட ஒடுக்குபவர்களின் நண்பனாக இருப்பதே அவரது இருப்புக்கும் பொருளாதார நலனுக்கும் உகந்தது என்ற வகையில் ராஜபக்ச குடும்பத்தை அவர் ஆதரிக்கிறார்.
இந்த உண்மையை அவர் மூடி மறைப்பதுதான் பிரச்சனை.
அவரை மலையக மக்களின் பிரதிநிதியாக துடுப்பாட்ட வரலாற்றில் தமிழன் என்ற இன அடையாளத்தை முன்னிறுத்தி சாதனை படைத்த ஒருவராக பார்ப்பது தவறு.
மலையக மக்களின் உரிமைக்காகப் போராடி அதிகார வர்க்கத்தின் துப்பாக்கிக்குண்டுக்கு பலியான முல்லோயா கோவிந்தன் மற்றும் மலையக மக்களின் நல்வாழ்வுக்காகத் தனது தேட்டங்கள் அனைத்தையும் அர்ப்பணித்து வாழ்நாள் முழுவதும் உழைத்த நடேசையர் போன்றவர்களுடன் ஒப்பிடும் போது முத்தையா முரளிதரன் செல்லாக்காசுக்கு ஒப்பானவர்.
அடுத்து முத்தையா முரளிதரனுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு என்பது சிறீலங்கா அணிக்காக விளையாடியதற்காகவோ அல்லது அந்த அணியில் தனது இருப்பைத் தக்க வைப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காகவோ ஏற்பட்ட ஒன்றாகக் கருத முடியாது.
துடுப்பாட்டத்துக்கு அப்பால் தன்னுடைய இருப்பையும் பொருளாதார நலன்களையும் தக்க வைப்பதற்காகப் பௌத்த சிங்கள பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தும் விதத்தில் அவர் பொது வெளியில் தெரிவித்த கருத்துகளும், அவற்றை நியாயப்படுத்தும் விதத்தில் அவர் மேற்கொண்ட செயற்பாடுகளுமே அவரது விளையாட்டுத் திறமையை ரசித்து வரவேற்ற தீவிரமான இரசிகர்களைக் கூட அவர்மீது கோபம் கொள்ள வைத்திருக்கிறது.
இந்தக் கோபத்தை பொத்தாம் பொதுவாக யாழ்ப்பாண அதிகார வர்க்கம் எதிர் மலையக மக்கள் என்று அடையாளப்படுத்தும் வேலையைப் பௌத்த சிங்களப் பேரினவாதிகள் தங்கள் ஒத்தோடிகளைக் கொண்டு கன கச்சிதமாகச் செய்துவருகின்றனர்.
மலையக மக்கள் சக்தி என்பது ஒருங்கிணைந்த உழைக்கும் மக்கள் சக்தி என்பதும் இந்த சக்தி உரியமுறையில் வழிநடத்தப்பட்டால் தங்களது பேரினவாத அரசியலுக்கு ஆப்பு வைக்கும் என்பதும் சிங்களத் தலைமைகளுக்குத் தெரியும். இதனாலேயே முன்னர் மலையக மக்களது குடியுரிமை மற்றும் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
இப்போது இந்த அபாயத்தைக் கருத்தில் கொண்டே பௌத்த சிங்களப் பேரினிவாதத் தலைமைகள் மலையகம் எதிர் யாழ் அதிகார வர்க்கம் என்ற முரண்பாட்டைக் கூர்மையடைய வைக்க முயல்கின்றன.
முத்தையா முரளிதரன் என்ற குட்டி முதலாளித்துவ பிரமுகர் தொடர்பான எதிர்ப்பு நடவடிக்கையை ஒட்டுமொத்த மலையக மக்களுக்கு எதிரான நடவடிக்கையாக மடைமாற்றிவிட இந்தச் சக்திகள் முயல்கின்றன. யாழ்ப்பாண அதிகார வர்க்கம் மலையக மக்களுக்கு இழைத்த துரோகத்தையும் அவர்களை நடத்திய விதத்தையும் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாது.
ஆனால் அதேநேரம் மலையக மக்களின் வாக்குரிமை மற்றும் குடியுரிமையைப் பறித்த பௌத்த சிங்களப் பேரினவாதிகளுடன் மலையக மக்களின் அரசியல் தலைமைகள் இணைந்தும் பிணைந்தும் அரசியல் செய்ததையும்; செய்து கொண்டிருப்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
இன்றைக்கு முத்தையா முரளிதரன்; தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டு விதந்து போற்றும் மகிந்த ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வருவதற்கு ஏணியாகப் பயன்படுத்திய சிறீலங்கா சுதந்திரக்கட்சி 1970களில் மலையக மக்களை அவர்கள் வாழ்ந்த தேயிலைத் தோட்டங்களைவிட்டு விரட்டியத்த வரலாறும், அந்த மக்கள் வாழ வழியின்றி உண்ண உணவின்றி ஆயிரக்கணக்கில் பட்டிணியால் மடிந்த வரலாறும்,எஞ்சியோர் புற்களை உண்டு உயிர் பிழைத்த வரலாறும் கறைபடிந்த அத்தியாயங்களாக உள்ளன.
அன்றைய காலகட்டத்தில் இந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்கள் என்பதும் வரலாறு.
அடுத்து முத்தையா முரளிதரன்; இந்தப் பிரச்சனை தொடர்பாக அளித்த தன்நிலை விளக்கத்தில் தனது குடும்பம் ஜேவிபியால் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.’இலங்கையை தன்னுடைய நவகாலனியாக வைத்திருக்க முயலும் இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராகப் போரிடுவது’ என்பது ஜேவிபியின் இலக்குகளில் ஒன்று .ஜேவிபி தனது முதலாவது கிளர்ச்சியின் போது, மலையக மக்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் முகவர்களாகக் கணித்தது.1987-89 ல் நடந்த இரண்டாவது கிளர்ச்சியின் போது இது மாற்றமடைந்தது.
இலங்கை குடிமக்களாக வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கும், இந்தியக் குடிமக்களாக இலங்கையில் வாழ்ந்து இந்திய நலனை முதன்மைப்படுத்தும் குட்டி முதலாளிகளுக்கும் வேறுபாடுள்ளது என்று அது ஒப்புக்கொண்டது. இந்த இரண்டாவது கிளர்ச்சியின் போது கணிசமான மலையக இளைஞர்கள் ஜேவிபியில் இணைந்திருந்தனர்.
ஆனால் இந்த கருத்தியல் மாற்றத்தை ஜேவிபியில் ஒரு பகுதியினர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். ஒட்டு மொத்த மலையக மக்களையும் இந்திய ஆக்கிரமிப்பாளர்களாகவே அவர்கள் கருதினார்கள். சோவன்ச அமரசிங்க இதில் முக்கியமானவர். அவரின் வாரிசுகளில் ஒருவரான விமல்வீரவன்ச பௌத்த சிங்களப் பேரினவாதக் காவலர் என்று சொல்லுமளவுக்கு ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டு வந்தவர்.
கடந்த தேர்தலில் முத்தையா முரளிதரன் அவருடன் கைகோர்த்துக்கொண்டு கொழும்பிலும் மலையகத்திலும் மலையக மக்களின் வாக்குகளைப் பிளவு படுத்தி அவர்களது தனித்துவமான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய முயன்றார். இது அந்த மக்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைத் தடுத்த செயலுக்கு எந்தவித்திலும் குறைவானதல்ல.
பௌத்த சிங்களப் பேரினவாதம் முத்தையா முரளீதரனின் பிரபலத்தை முதலீடாக வைத்து அரசியலில் துஸ்ரா பந்துவீச்சைச் செய்கிறது என்பதே உண்மையாகும்.முத்தையா முரளிதரன் தனது பிரபலத்தை முதலீடாக வைத்து மலையக மக்களின் அவலங்களை, அவர்களின் நியாயமான 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையிலுள்ள நியாயத்தன்மையை, வெளிப்படுத்துவதற்கு முயன்றிருந்தால் அவரை நாங்கள் ஆதரிக்கலாம்.
MIA என்கிற மாதங்கி அருட்பிரகாசம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலுள்ள நியாயத்தன்மையை உலகுக்கு எடுத்துச் சொன்ன மாதிரி, முத்தையா முரளிதரன்; மலைய மக்களின் அவலங்களை சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருந்தால் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கும்.
முத்தையா முரளிதரனை எதிர்ப்பதென்பது அவரது ஒத்தோடி அரசியலுக்கு எதிரானதேயன்றி அவர் மீதான பொறாமையின் பாற்பட்ட எதிர்ப்பல்ல.
– சிவா சின்னபொடி –