இராஜபக்சேவுக்குத் துணை போகாதீர் – விஜய்சேதுபதிக்கு கோவை இராமகிருட்டிணன் வேண்டுகோள்

800 என்கிற பெயரில் இலங்கை மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகத் தயாரிக்கப்படுகின்றது.800 என்பது அவர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தவர்கள் எண்ணிக்கை என்று சொல்லப்படுகிறது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார்.

இந்த அறிவிப்பு வெளியானதும் இராஜபக்சே மகன் நாமல், விஜய்சேதுபதிக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இதனால் உலகத் தமிழர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி,இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக கோவையில் பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கும் முடிவை நடிகர் விஜய்சேதுபதி கைவிட வேண்டும் என தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது……

ஈழத்தமிழர்களைக் கொடூரமாகக் கொன்று, சிங்களப் பேரினவாத இராஜபக்சேவிற்கு அரசிற்குத் துணை போனவர் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், அப்படிப்பட்டவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தில் தமிழகத்தின் சிறந்த நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது வேதனையளிக்கின்றது.

சிங்கள அரசிற்கும், தமிழ் மக்களைக் கொன்றொழித்த இராஜபக்சேவிற்கும் ஆதரவாகச் செயல்பட்டவர் முத்தையா முரளிதரன், தனக்குத் தமிழ் தெரியாது என்பதைப் பெருமையாகச் சொல்லக் கூடியவர், சிங்கள மொழியில் மட்டுமே பேசுபவர் முத்தையா முரளிதரன்.இப்படிப்பட்ட நபரின் பாத்திரத்தில்,நமது மதிப்பிற்குரிய நடிகர் விஜய் சேதுபதி நடித்தால் அது உலகத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கும்.

எந்த வடிவத்திலும், கடுகளவு கூட சிங்கள அரசிற்கும், இராஜபக்சேவிற்கும் நன்மை பயக்கின்ற செயலில் நடிகர் விஜய்சேதுபதி ஈடுபடக் கூடாது.முரளிதரன் வேடத்தில் நடிப்பது தொழில் என்று விஜய்சேதுபதி சொன்னால் அதை ஏற்கமுடியாது.

இந்தத் திரைப்படம் எடுக்கக்காரணம், தமிழர்களைச் சமாதானப்படுத்தவும், கடந்த காலக் கொடுமைகளை மறக்கடிக்கவும்,தமிழர்களின் மனதை மாற்றவும் முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கெட் வீரர் ரூபத்தில் நடத்தப்படுகின்றது இதற்கு நடிகர் விஜய்சேதுபதி பயன்படுத்தப்படுகின்றார்.

இது சிங்களவர்களுக்கும், இராஜபக்சேவிற்கும் துணை போவதாகக் கருதப்படும். எனவே, நடிகர் விஜய்சேதுபதி இந்த முடிவைக் கைவிட வேண்டும்.

இது திரைப்படம்தான் என்று சமாதானம் சொல்லக்கூடாது. எந்த வடிவத்திலும் இலங்கை அரசிற்கு துணை போகக்கூடாது. தமிழ்மக்கள் மத்தியில் மனிதாபிமானி, எளிமையானவர், முற்போக்கானவர் என்று எடுத்த பெயர்களை விஜய்சேதுபதி கெடுத்து கொள்ளக்கூடாது. என்றும் போல விஜய்சேதுபதி மக்கள் செல்வராக மககள் மனதில் நிலைக்க வேண்டுமானால் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அதையும் தாண்டி இது கலை, சினிமா என்று சொல்லி முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடித்தால், நிச்சயமாக உலகத் தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

தந்தை பெரியார் கருத்துகளில் பற்றுடையவராக நடிகர் விஜய்சேதுபதி இருந்தாலும் கூட, அவரது செயல் தமிழ் இனத்திற்கு மாறாக இருக்குமானால் அதை தந்தை பெரியார் திராவிட கழகம் கண்டிப்பாக எதிர்க்கும்.
அந்தத் திரைப்படத்தை திரையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.

Leave a Response