துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 மட்டைப்பந்துப் போட்டியின் இன்றைய 24 ஆவது ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது. அபுதாபியில் உள்ள ஷேக் சையீத் மைதானத்தில் இன்றைய ஆட்டம் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதி-ஷுப்மன் கில் களமிறங்கினர். பஞ்சாப் பந்துவீச்சாளர் சமி வீசிய பந்தில், ராகுல் திரிபாதி(4 ரன்கள்) பவுல்ட் ஆனார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரானா 2 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி சற்று தடுமாறியது. மறுமுனையில் நிதானமாக ஆடிய ஷுப்மன் கில் 57 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த இயன் மார்கன் 23 ரன்களிலும் அண்ட்ரே ரசல் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதற்கிடையில் கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாசி 27 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அணியின் தலைவர் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். நிதானமாக நிலைத்து நின்று ஆடிய இருவரும் அரை சதத்தைக் கடந்தனர்.
இந்நிலையில் மயங்க் அகர்வால் 56 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா பந்துவீச்சாளர் பிரசித் வீசிய 15வது ஓவரில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 16 ரன்களில் பவுல்ட் ஆனார். அடுத்து வந்த சிம்ரன் சிங்(4 ரன்கள்) பிரசித் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கே.எல்.ராகுல் 58 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து, பிரசித் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார்.
ஆட்டத்தின் இறுதியில் 2 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் மந்தீப் சிங்கின் விக்கெட் பறிபோனது. இதனால் 1 பந்திற்கு 7 ரன்கள் என்ற நிலை உருவானது. அப்போது சுனில் நரேன் வீசிய கடைசிப் பந்தை மேக்ஸ்வெல் பவுண்டரியை நோக்கி அடித்தார்.
பந்து பவுண்டரி லைனுக்கு மிக அருகில் சென்று விழுந்ததால் முடிவில் சிறிது குழப்பம் ஏற்பட்டு பின்னர் 4 ரன்கள் வழங்கப்பட்டது.அந்தப் பந்து இரண்டு இஞ்ச் தள்ளி விழுந்திருந்தால் ஆறு ரன்கள் கிடைத்திருக்கும். அதனால் ஆட்டம் சமன் ஆகியிருக்கும். அதன்பின் சூப்பர் ஓவர் நடந்திருக்கும். இரண்டு இஞ்ச் முன்னால் விழுந்ததால் அதற்கான வாய்ப்பே இல்லாமல் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் பஞ்சாப் அணியினர் கண்கள் குளமாகின.