தமிழகம் முழுதும் ரேசன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் – தமிழக அரசு புதிய உத்தரவு

இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயோ மெட்ரிக் கருவி சரிவர செய்யாததால் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் குடும்ப அட்டைதாரர்கள் திண்டாடினர். இந்நிலையில், கைரேகை அவசியம் இல்லை என தமிழக அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள நியாயவிலைக் கடையிலும் பொருட்கள் வாங்கும் வகையில், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, 2 கோடியே 9 இலட்சத்து 44 ஆயிரத்து 864 குடும்ப அட்டைதாரர்களுக்கு 34 ஆயிரத்து 773 நியாயவிலைக் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தை அமல்படுத்த வசதியாக அனைத்துக் கடைகளிலும் பாயின்ட் ஆப் சேல் இயந்திரத்துக்கு மாற்றாக, பயோ மெட்ரிக் எனப்படும் கைவிரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் பொருட்கள் வாங்க வந்தவர்கள், கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பல இடங்களில் கைரேகை பதிவுக்கருவி சர்வருடன் இணைப்பு கிடைக்காததால் சரியாக வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்தது.

இதனால் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் திண்டாடினர். குடும்பத்தில் ஒருவரின் கைரேகை பதிவு ஒத்துவரவில்லை என்றால், வீட்டில் உள்ள வேறு யாரையாவது கூட்டி வாருங்கள் என்று கடை ஊழியர்கள் திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் நேரம் வீணாவதுடன், பொதுமக்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். இதுபற்றிய புகார் தமிழகம் முழுவதும் எழுந்தது.

இந்நிலையில், அனைத்து கூட்டுறவு, மண்டல இணை பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் நேற்று முன்தினம் திடீரென ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், “கைவிரல் ரேகையை அங்கீகரிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக யாருக்கும் பொருட்கள் வழங்காமல் இருந்துவிடக் கூடாது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த வழிமுறைகளை பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும்” என்று அரசு அனைத்து நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த உத்தரவில், “பொருட்கள் வழங்க கைவிரல் ரேகை அங்கீகாரம் முதல் நிலையாகும். அடுத்து ஸ்கேன் முறையில் தரலாம். அது முடியாதபட்சத்தில், ஆதார் (ஓடிபி) முறை, ஆதார் அட்டையை ஸ்கேன் செய்யும் முறை, குடும்ப அட்டைதாரரின் பதிவு செய்த கைபேசிக்கு ஓடிபி அனுப்பும் முறை, மின்னணு குடும்ப அட்டையை (ஸ்மார்ட் கார்டு) ஸ்கேன் செய்யும் முறை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Response