பழிச்சொல் வந்தாலும் கவலைப்படாமல் தமிழ்மக்களுக்காகப் பணியாற்றுவேன் – சி.வி உறுதி

வடமாகாண முதல்வருக்கு நிறைய நெருக்கடிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் அவர் உறுதியாக மக்கள் பணி ஆற்றுகிறார். அண்மையில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பேச்சு குறிப்பிடத்தக்கது. அந்தப்பேச்சு….

நல்லவர்களை எதிர்ப்பு அரசியவல்வாதிகள் என, புறம் ஒதுக்கும் அல்லோர்கள் அநீதி நிகழ்கின்றது. மக்களுக்காக உண்மையாக உழைப்பவர்கள் புறம் ஒதுக்கப்படுவதை கண்டித்து பொய்மைகளை திருத்தி நன்மைகளை ஊக்குவித்து மக்களுக்கு நீதியை பெற்று தர உழைப்பவர்களை ஆதரித்து பயணிக்கும் தேசிய கடன் இக்காலத்தில் எம் முன்னால் உள்ளது

நன்மைக்காக போராடும் மாந்தர்களை ஆதரித்து நன்மை தீமை வேறு பிரித்து நல்லவரையும் தீயவரையும்…தராசில் நிறுத்தி நீதி வழங்குவோம்.

“இப்போது எமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவது ஒழுங்கானதும், வினைத்திறன்
மிக்கதும்,விலைபோகாததும், நேர்மையானதுமான ஒரு அரசியற் கட்டமைப்பாகும்.

எமது தற்போதைய “நாட்டாண்மை” ஆட்சி முறைமை நீக்கப்பட வேண்டும். அப்போது தான் இந்த நாட்டில் எமது மக்களுக்கு ஒரு பூரண விடிவு கிடைக்கும்.வன்முறை மூலம் நிர்வாகம் நடந்த காலம் மலையேறிவிட்டது என்பதை மக்கள் உணர வேண்டும்.

தற்போது நடந்து முடிந்த தேர்தலின் போது கோடி கோடியாகப் பணம் செலவழிக்கப்பட்டது. பணத்தைச் செலவழித்தவர்கள் எவ்வாறு தாம் செலவழித்ததை இனி ஈடு செய்ய முடியும் என்பதிலேயே கண்ணுங் கருத்துமாக இருக்கின்றார்கள்.

சிலர் பணம் தந்த நிறுவனங்களுக்கு எவ்வாறு விசுவாசமாய் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார்கள். பணம் செலவழித்து வாக்குகளை வாங்கும் அண்மைக்கால பழக்கங்களை நாங்கள் இனியாவது கைவிட வேண்டும்.

நாம் எமது முகவரியை இழக்காமல் எமது மக்களை அறிவார்ந்த சமுதாய மறுமலர்ச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்

என்னைப் பலரும் ஒரு “எதிர்ப்பு அரசியல் வாதி” என வர்ணிப்பதை நான் அறிவேன். நான் ஒரு அரசியல்வாதியும் இல்லை. கட்சி சார்ந்தவனும் இல்லை. நீதித்துறையில் எனது காலத்தைக் கழித்த பின்னர் சிவனே என்று ஆன்மீகத்துடனும், இலக்கியத்துடனும், சட்டத்துடனும் மூழ்கியிருந்த என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தார்கள்.

தேர்தலில் போட்டியிட வைத்தார்கள். மக்களும் தங்கள் வாக்குகளைப் பெருவாரியாக எனக்கு அளித்து அமோக வெற்றியடையச் செய்தார்கள். அதனால் என் நிலை மாறியது.

நான் கொழும்பிலே பிறந்து, கொழும்பிலே கல்வி கற்று, அங்கேயே சீவித்தவன். சுமார் 10 வருடங்கள் வடகிழக்கு மாகாணங்களில் நீதித்துறையில் இருந்து கடமையாற்றியவன். ஆனால் சிறுவயது முதல் எனக்கு தமிழ் மீது பற்று, தமிழர்கள் மீதும் பற்று.

அத்துடன் வடமாகாணம், கிழக்கு மாகாணம், மலையகம் எனப் பிரித்து நோக்காது அனைத்து தமிழர்களும் இந்த இலங்கைத் திருநாட்டில் சிங்கள மக்களுடன் சம அந்தஸ்துடைய இனமாக வாழ வேண்டுமென்பதில் குறியாக இருந்தவன்.

எனினும் இங்கு வந்த பின்னர் தினமும் என்னைச் சந்திக்க வருகின்ற மக்கள் படுகின்ற அவலங்கள் பற்றி, அவர்களுடைய கஸ்டங்கள் பற்றி, அவர்களுடைய தேவைகள் பற்றி, அவர்கள் பறிகொடுத்த வசதிகள் பற்றி, அவர்கள் வாழ்வில் இழந்தவை பற்றித் தமது சோகக் கதைகளை எனக்கு எடுத்துக் கூறக் கூற என்னுள் ஒரு வைராக்கியம் பிறந்தது.

இந்த மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் எந்த மட்டத்திலாவது சென்று பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று. அதற்காக நான் எவ்வாறான எதிர்ப்பை அல்லது பழிச்சொல்லை ஏற்க நேர்ந்தாலும். நான் அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை.

சில கட்சிகளில் ஒருவர், இருவர் எடுக்கும் முடிவுகளுக்கு எல்லோருமே கட்டுப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். அவர்களின் முடிவுகளில் குறையிருந்து எடுத்துக் காட்டினால் “எதிர்ப்பு அரசியல்வாதி” என்கின்றார்கள்!”

– வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

Leave a Response