பாஜகவின் எண்ணமும் ரஜினியின் எண்ணமும் ஒன்றுதான் – நிர்வாகி ஒப்புதல்

ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி எழுச்சிக்கூட்டம் அண்மையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவருமான அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது….

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருப்பதால், தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்கவில்லை. பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி தர்மத்துடன் செயல்படுகின்றன. இந்தத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வரவேண்டும். யார் முதலமைச்சர் என்பதை எல்லாம் மக்கள் முடிவு செய்வார்கள். அ.தி.மு.க. குறித்து பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா கூறி இருக்கும் கருத்துகள் தரக்குறைவானவை அல்ல. அவர் பா.ஜனதாவின் தொடக்க காலத்தில் இருந்தே செயல்பட்டு வரும் மூத்த தலைவர்.

நீட் தேர்வு என்பது 2010 ஆம் ஆண்டு காங்கிரசு-தி.மு.க. கூட்டணி ஆட்சி இருக்கும்போதே அமல்படுத்தப்பட்டது. அப்போது 6 தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு மாணவரின் பெற்றோர் வழக்கு தொடர்ந்ததில், சுப்ரீம் கோர்ட்டு ஒரே தேர்வாக அறிவித்தது.

அதனை அரசு இதழில் (கெஜட்) வெளியிட்டது மத்தியில் இருந்த காங்கிரசு-தி.மு.க. கூட்டணி அரசு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீட் தேர்வுக்கு எதிராகப் பெற்றோர்கள்-மாணவர்கள் யாரும் போராடவில்லை. அரசியல் கட்சியினர்தான் போராடுகிறார்கள். அரசியல் கட்சியினரின் தவறான அறிக்கைகளால் தான் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். 13 தற்கொலைகளும் இவ்வாறு நடந்தவைதான். தற்போது நடந்து உள்ள நீட் தேர்வில் 180 கேள்விகளில் 173 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்பட்டு உள்ளன. நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி, நீட் தேர்வை எதிர்த்தவர்களுக்கு பரீட்சை முடிவுகள் பதில் சொல்லும். நடிகர் சூர்யாவுக்கு நீட் தேர்வு குறித்த புரிதல் வேண்டும். தேர்வு முடிவுகள் அவருக்கு அதைப் புரிய வைக்கும்.

நடிகர் ரஜினி நல்ல மனிதர். அவர் அரசியலுக்கு சரியான நேரத்தில் வருவதாகக் கூறி உள்ளார். அவர் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். அவர் ஆன்மிக அரசியல் என்று கூறி இருக்கிறார். பா.ஜனதாவும் ஆன்மிக அரசியலில்தான் உள்ளது. எனவே 2 எண்ணங்களும் ஒன்றுதான். அது மக்களுக்கு நன்மை மட்டுமே செய்வதாகும். தேர்தல் கூட்டணி குறித்து கட்சி முடிவு செய்யும். தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி இடும் கட்டளையின்படி செயல்படுவேன்.

இவ்வாறு பா.ஜனதா மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறினார்.

Leave a Response