ஆட்டத்தைத் தொடங்கிய இராஜபக்சே – திலீபன் நினைவேந்தலுக்குத் தடை

யாழ்ப்பாணம் ஊரெழுவில் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தவர் திலீபன். தந்தை செல்வாவின் அகிம்சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு ஈழத்தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன் 1987 ஆம் ஆண்டு,இந்திய அமைதிப்படை அங்கிருந்த காலத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி இந்திய அரசாங்கத்திடம் ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தவும் போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் உண்ணாவிரதத்தின் பனிரெண்டாம் நாளான செப்டம்பர் 26 1987 இல் வீரச்சாவடைந்தார்.

திலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகள்

1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

இக்கோரிக்கைகளுக்கு இந்திய அரசு செவி சாய்க்காததால் அவர் உயிரிழந்தார்.

அவர் உண்ணாநிலையைத் தொடங்கிய இந்நாளை நினைவு கூற ஈழத்தமிழர்கள் முன் வந்த நிலையில் இராஜபக்சே சகோதரர்கள் தடை விதித்துள்ளனர்.

திலீபன் நினைவிடத்தில் அமைக்கப்பட்ட மேடை மற்றும் கொடிகளை இரவோடிரவாக அகற்றியுள்ளனர். காலையில் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களை மிரட்டி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் தடைகளை மீறி எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினம் காலை கோண்டாவில் பகுதியில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனையடுத்து அவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்த பின்பு தமிழர்கள் அமைதியாக விளக்கேற்றி வழிபடவும் இராஜபக்சே சகோதரர்கள் தடை விதித்திருப்பது உலகத்தமிழ் மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response