பனைமரங்களின் அழிவைத் தடுக்கவேண்டும்- ஈரோடு மாவட்ட ஆட்சியர் பேச்சு

நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்த பனை மரங்கள் நடும் திட்டத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் பனை மரங்களை வளர்த்து கரைகளை பலப்படுத்தும் திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

 இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட்சியர் எஸ்.பிரபாகர் பேசியதாவது:

 கடும் வறட்சியிலும் உயிருடன் இருந்து சிரமப்படும் மக்களுக்கு உணவு தரக்கூடிய சிறந்த மரம் பனை மரமாகும். பனை மரங்கள் நீர்நிலைகளின் கரைகளை மிகவும் வலிமையாக்கக் கூடியவை. மேலும், நமது முன்னோர்கள் பனை மரங்களைத்தான் ஏரி, குளங்கள், நதிகளின் கரைகளை பலமாக்க பயன்படுத்தியுள்ளார்கள்.

 மிக மெதுவாக வளரும் தன்மை கொண்ட பனை மரம் மிக வேகமாக அழிவைச் நோக்கிச் செல்வதைத் தடுக்க நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.

 ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளில் உள்ள சுற்றுச்சூழல் மன்றங்கள், தேசிய பசுமைப்படை, நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற அமைப்புகளில் உள்ள மாணவர்கள் மூலமாக பனை விதைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

 இந்த விதைகளை கீழ்பவானி பிரதான வாய்க்கால், மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களின் கரைகள், நெடுஞ்சாலை, பஞ்சாயத்து சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் அந்தந்த வட்டாரத்தில் உள்ள மக்கள், விவசாயிகள் பங்கேற்புடன் நட திட்டமிடப்பட்டுள்ளது.

  பொதுப்பணித் துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வாய்க்கால்கள், குளக்கரைகளில் எங்கெங்கெல்லாம் பனை விதைகள் விதைக்க வாய்ப்புள்ளது என்பதையும் இது போலவே பிற துறையினரும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் எங்கெல்லாம் விதைக்க முடியும் என்பதையும் கண்டறிய வேண்டும்.

 மேலும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சித் தலைவர்கள் தங்கள் பகுதிகளில் பனை விதைகளை விதைக்க பொதுமக்களுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

 ஏற்கெனவே தங்களின் முழு முயற்சியில் பனை விதைகள் விதைத்த உள்ளாட்சித் துறைத் தலைவர்கள் அடையாளம் காணப்பட்டு கெளரவிக்கப்படுவர்.

 இந்தப் பணியில் ஆர்வம் உள்ள தன்னார்வலர்களும், விவசாய சங்கங்களும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.

 மேலும், இதுகுறித்த விவரங்களை அறிய மாவட்ட வன அலுவலர் ம.நாகராஜன் மற்றும் சுற்றுச்சூழல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தி.கீதா ஆகியோரைத் தொடர்பு கொண்டு நீர்நிலைகளை பலப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றார்.

 மாவட்ட வன அலுலரை 94433-70311 செல்லிடப்பேசி எண்ணிலும், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளரை 94870-41241 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

Leave a Response