145 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு சந்தை திறக்க அனுமதி – கடும் கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் காய்கறிக் கடைகள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் காய்கறி வாங்க கோயம்பேடு சந்தைக்கு படை எடுத்தனர். கோயம்பேடு சந்தையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதனால், பழம் மற்றும் மலர் சந்தை ஏப்ரல் இறுதி வாரத்தில் மூடப்பட்டது.அதைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தை முற்றிலும் மூடப்படுவதாக மே 5 ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்பட்டது. திருமழிசையில் மே 7 ஆம் தேதி காய்கறிச் சந்தை செயல்படத் தொடங்கியது.

இந்நிலையில் சென்னையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால், கோயம்பேடு சந்தையைத் திறக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இதன்படி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கோயம்பேட்டில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா முதல்வரைச் சந்தித்து கோயம்பேடு சந்தையைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

பின்னர், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதன் முடிவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோயம்பேடு சந்தை வரும் செப்.28 ஆம் தேதி திறக்கப்படும் என்று துணை முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…… :

கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் உணவுதானிய மொத்த விற்பனை சந்தை 18 ஆம் தேதியும், காய்கறி மொத்த விற்பனைச் சந்தை 28 ஆம் தேதியும் திறக்கப்படும். இதன்பிறகு அடுத்தகட்டமாக கனி, சிறு மொத்த காய்கறி, மலர் சந்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தையைத் திறக்கும் போது, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஒரு வழிப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டு வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ‘பி’ சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டு இடதுபுறமாக திரும்பி, ‘ஈ’ சாலை வழியாக மலர் சந்தைக்கு அருகில் உள்ள காலி இடத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். இதன்பிறகு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே ஒன்றன்பின் ஒன்றாக அனுமதிக்கப்படும்.

சந்தைக்கு வரும் அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் ‘ஏ’ சாலையை ஒட்டி அமைந்துள்ள கனரக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஒரு கடைக்கு ஒரு நேரத்தில் ஒரு கனரக வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். கனரக சரக்கு வாகனங்கள் தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே சந்தை வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படும். சரக்குகளை இறக்கி வைத்தபின் அன்றைய தினம் இரவு 12 மணிக்குள் சந்தையை விட்டு வெளியில் சென்றுவிட வேண்டும். சில்லறை விற்பனை வாகனங்கள் அதிகாலையிலிருந்து மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். ஆட்டோ மற்றும், இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

தனி நபர்கள் காய்கறி வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான உரிய அடையாள அட்டைகள் மற்றும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் பின்னல் ஆடைகள் வழங்கப்படும். சந்தைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி இல்லை. தனிநபர் இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கீரைகள் மற்றும் வாழை இலைகள் விற்பனை ஏற்கனவே இயங்கி வந்த 9 ஆம் எண் நுழை வாயிலில் உள்ள கடைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும். சாலையோர விற்பனை முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.

விதிகள் முறையாகக் கடைபிடிக்கப்படுகிறதா என்பதைக் காவல் துறையினர் கண்காணிப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்ய தனியார் நிறுவனங்கள் மூலம் பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறும் கடை உரிமையாளர்கள் மற்றும் தனிநபர்கள் மீது உரிம விதிமுறைகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வாரத்தில் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடும்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், 145 நாட்கள் கழித்து கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்படுவது வியாபாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Response