இந்தி தெரியாத தமிழக இயற்கை மருத்துவர்களை பயிற்சி வகுப்பில் இருந்து வெளியேறுங்கள் என்று கூறிய ஆயுஷ் அமைச்சக செயலாளர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக பாஜக கூட்டணியிலுள்ள தமிழ் மாநில காங்கிரசு தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஆக.23) வெளியிட்ட அறிக்கை:
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் யோகாவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பில் தமிழகத்தை சேர்ந்த இயற்கை மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
ஆன்லைன் பயிற்சி வகுப்பின் முடிவில் ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா கலந்து கொண்டு இந்தியில் உரையாற்றினார். தமிழக இயற்கை மருத்துவர்கள் ‘எங்களுக்கு இந்தி தெரியாது. ஆகவே ஆங்கிலத்தில் உரையாற்றுங்கள்’ என்று கோரியபோது இந்தி தெரியாதவர்கள் ‘ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இருந்து வெளியேருங்கள்’ என்று கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
உலகின் அனைத்து மொழிகளுக்கும் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும்போது அவ்வாறு கேட்டதில் என்ன தவறு. தமிழகத்தின் இயற்கை மருத்துவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா மீது மத்திய அரசு நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வண்ணம் அரசு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரசு சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.