பட்டினிச்சாவிலிருந்து நெசவாளர்களைக் காக்க உடனடி நடவடிக்கை – சீமான் வலியுறுத்தல்

பல்லாயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர் குடும்பங்களை பட்டினிச்சாவிலிருந்து காக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,,,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கைலாசம்பாளையத்தைச் சேர்ந்த கைத்தறித் தொழிலாளி சுப்ரமணியன் கடன்தொல்லை மற்றும் வறுமையால் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதில் அவரும் அவருடைய மனைவியும் உயிரிழந்ததும் அவரது இரு குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனும் செய்தி பேரதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட தொழிற்முடக்கத்தைச் சரிசெய்ய மத்திய-மாநில அரசுகள் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாக முற்றாக தொழில் முடங்கி வாழ்வாதாரம் பறிபோனதால் வருமானமின்றி வறுமையும், கடன் தொல்லையும் சூழ்ந்து ஏற்படுத்திய மன உளைச்சலே இந்த தற்கொலைக்குக் காரணம் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

தமிழகத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான நெசவாளர் குடும்பங்கள் கைத்தறித் தொழிலையே முழுநேரத் தொழிலாகச் செய்து வாழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே விசைத்தறி, வெளிநாட்டு ஆடை இறக்குமதி, உழைப்புக்கேற்ற ஊதியமின்மை உள்ளிட்ட பல காரணங்களால் நம் மரபுவழித் தொழில்களில் ஒன்றான கைத்தறி நெசவுத்தொழில் வேகமாக நலிவடைந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலையொட்டி போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கடந்த 100 நாட்களுக்கும் மேலாக கைத்தறிகள் இயக்கப்படாமல் முடங்கிப் போயுள்ளதால் வருமானமின்றி கட்டட வேலை போன்ற தினக்கூலி வேலைக்கு செல்லும் அவல நிலைக்கு நெசவாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தில் கூலி வேலை கிடைப்பதும் கடினமாக இருப்பதால் கைத்தறி நெசவாளர்களின் குடும்பங்கள் போதிய வருமானமின்றி அன்றாட பிழைப்பிற்கே அல்லல்படுகின்றனர்.

ஏற்கனவே நெய்த சேலை, வேட்டிகளுக்கு உரிய சம்பளம் தரப்படாமலும், புதிதாக துணி நெய்வதற்காக பட்டு மற்றும் இதர மூலப்பொருட்கள் வழங்கப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கைத்தறி நெசவாளர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர். நெசவாளர்களுக்காக அரசு அறிவித்த 2000 ரூபாய் நிதி உதவி 50 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என மனம் வருந்துகின்றனர்.

பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் முதல் உள்நாட்டு சிறு, குறு நிறுவனங்கள் வரை இந்த ஊரடங்கால் ஏற்பட்ட தொழில் முடக்கத்திலிருந்து மீள முடியாது தவித்துவரும் சூழ்நிலையில் கைத்தொழில் புரியும் ஏழை, எளிய பாமர தொழிலாளர்களின் நிலைமை மிகுந்த பரிதாபகரமானதாக உள்ளது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழக அரசு விரைவில் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால் நோய்த்தொற்றால் இறப்பவர்கள் எண்ணிக்கையைவிட பட்டினிச்சாவால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகக்கூடும். அப்படி ஒரு நிலையை நோக்கி தமிழகம் சென்றுவிடாமல் தடுக்க, கைத்தறி நெசவாளர்கள் உட்பட அனைத்து பாரம்பரிய கைவினைஞர்களுக்கும் அரசு போதிய தொழில் பாதுகாப்பு வழங்க முன்வர வேண்டும்.

சொல்லொணாத் துயரத்தில் மூழ்கியுள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழக அரசு,

1. அமைப்புசாரா நெசவாளர்கள் உட்பட அனைத்து நெசவுத் தொழிலாளர்களுக்கும் ஊரடங்கு முடியும்வரை குறைந்தபட்சம் 8000 ரூபாய் மாதாந்திர துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும்.

2. முடங்கிபோயுள்ள கைத்தறித் தொழிலை மீட்டெடுக்க 1989 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் செய்தது போல கைத்தறி நெசவாளர்களிடமிருந்து கையிருப்பில் உள்ள நெய்யப்பட்ட வேட்டி, சேலைகளை தமிழக அரசே கொள்முதல் செய்ய முன்வர வேண்டும்.

3. கடந்த பல மாதங்களாக மூத்த நெசவாளர்களுக்கு தரப்படாமல் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. நிறுத்திவைக்கப்பட்டுள்ள சம்பளத்தொகையை வழங்க ஏற்பாடு செய்வதுடன், தொடர்ந்து நெசவுத் தொழிலை மேற்கொள்ள பட்டு, பாவு, ஜரிகை உள்ளிட்ட மூலப்பொருட்களை வழங்க வேண்டும்.

5.விவசாயத்தைப் போலவே நெசவுத்தொழிலுக்கும் முக்கியத்துவம் அளித்து, நெசவாளர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்க வேண்டும்.

தமிழக கைத்தறி நெசவாளர்களின் நியாயமான கோரிக்கைகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கைத்தறி நெசவுத் தொழிலையும், பல்லாயிரக்கணக்கான நெசவாளர்களின் குடும்பங்களையும் மீட்டெக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response